ஆகஸ்ட் 2, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில், பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரம் மாவட்டத்தின் பிரகாத் கிராமத்திற்கு அருகே பசுக்களைக் கடத்தியதாக கூறி 50 வயது முஸ்லீம் நபர் ஒருவரை பசு பாதுகாவலர்கள் கொடூரமாக அடித்துக் கொன்றனர்.
செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 12.30 மணியளவில் சியோனி மால்வா நகருக்கு அருகிலுள்ள பாரகாத் கிராமத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற டிரக்கை 10-12 பேர் கொண்ட பசு காவலர்கள் இடைமறித்து 28 மாடுகளை ஏற்றிச் சென்ற மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்த நசீர் அகமது, அருகில் உள்ள நர்மதாபுரம் மாவட்டம் நந்தர்வாடா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஷேக் லாலா (38), சையத் முஷ்டாக் (40) ஆகிய மூன்று பேரைத் தாக்கியதாக நர்மதாபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) குர்கரன் சிங் தெரிவித்தார்.
மருத்துவமனையில் அனுமதி:
உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் பேரில், சம்பவம் நடந்த அரை மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தலையில் அடிபட்ட நசீர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவரும் பலத்த காயம் அடைந்து மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
“நந்தர்வாடா கிராமத்திலிருந்து 8-10 கிலோமீட்டர் தொலைவில் மாடுகளை தங்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்று கொண்டிருந்த போது ஆயுதமேந்திய பசு காவலர்கள் அவர்களைத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அருகிலுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் ” என்று எஸ்பி கூறினார்.
தாக்கப்பட்டவர்கள் பேட்டி:
உயிர் பிழைத்தவர்களில் ஒருவரான ஷியாக் லாலா செய்தியாளர்களிடம் பேசுகையில், தாக்குதலில் 50-60க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டதாக கூறினார். “நாங்கள் 8-10 கிலோமீட்டர் தூரம் கூட பயணித்திருக்கவில்லை, அவர்கள் எங்களை வழிமறித்து, எங்களை டிரக்கில் இருந்து வெளியே வர வற்புறுத்தி, எதையும் விசாரிக்காமல் எங்களைத் தாக்கினர். அவர்கள் தடிகள் மற்றும் கம்பிகளால் ஆயுதம் ஏந்தியிருந்தனர். அஹ்மதை கொன்றனர்,” என்று அவர் கூறினார்.
சந்தையில் விற்கவே மாடுகளை அமராவதிக்கு கொண்டு சென்றதாக லாரியை ஓட்டி வந்த லாலா கூறினார்.
மாடுகளை மீட்ட போலீசார்:
லாரியில் இருந்து 26 மாடுகளை மீட்ட போலீசார், அரசு நடத்தும் மாட்டுத் தொழுவங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாட்டு சந்தையில் விற்பனை செய்வதற்காக தாக்கப்பட்ட மூவரும் அமராவதிக்கு மாடுகளை கொண்டு சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு எஃப்ஐஆர்களை போலீசார் பதிவு செய்துள்ளனர் – ஒன்று தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராகவும், மற்றொன்று தாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு எதிராகவும்.
வழக்கு பதிவு:
“இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 147 (கலவரம்) மற்றும் 148 (பயங்கர ஆயுதம் ஏந்தி கலவரம் செய்தல் ) ஆகியவற்றின் கீழ் அடையாளம் தெரியாத 12 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட இருவருக்கு எதிராக, சட்டவிரோதமாக மாடுகளை கடத்தியதாக மற்றொரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்வோம், ”என்று எஸ்பி மேலும் கூறினார்.
தொடரும் கும்பல் படுகொலைகள்:
மத்தியப் பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களில் பசுவின் பெயரால் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மே 2, 2022 அன்று, மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில், பசுவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர்கள், 15 முதல் 20 பேர் கொண்ட இந்துத்துவா கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.இச்சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் குறை பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்தது.
தாக்கப்பட்ட ஆதிவாசிகள்:
இறந்தவர்கள் சாகர் பகுதியைச் சேர்ந்த சம்பத் பாட்டி மற்றும் தன்சாவில் வசித்து வந்த சிமாரியா என அடையாளம் காணப்பட்டனர். தாக்குதலில் காயமடைந்த பிரஜேஷ் பாட்டி என்பவர், தாக்குதல் நடத்தியவர்கள் இந்துத்துவா குழுக்களான பஜ்ரங் தள் மற்றும் ராம் சேனாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் கண்டனம்:
“சியோனி மால்வா பகுதியில் ஒரு கும்பல் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இருவர் காயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாரேனும் குற்றம் செய்திருந்தால் சட்டம் தன் கடமையை எடுக்கும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆளும் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று தகவல்கள் வருகின்றன. மேலும் அவர்களை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன..
மத்திய பிரதேசம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆளும் பாஜகவை சேர்ந்தவர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா இந்தியில் சமீபத்திய சம்பவம் குறித்து ட்வீட் செய்து, ஆளும் கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.