ஜந்தர் மந்தரில் பிரஹலாத் மோடி போராட்டம்:
பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார். பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும் ஒன்றிய அரசை கண்டித்து ரேஷன் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன் டீலர்கள் சங்கத்தின் தலைவராக பிரஹலாத் மோடி உள்ளார். அகில இந்திய நியாய விலைக் கடை வியாபாரிகள் கூட்டமைப்பின் (AIFPSDF) துணைத் தலைவராகவும் அவர் உள்ளார்.
பிரதமர் மோடியின் சகோதரர் பேச்சு:
நமது இருப்புக்கான நீண்டகால கோரிக்கைகளை பட்டியலிட்டு AIFPSDF இன் பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பிக்கும் என்று பிரஹலாத் மோடி கூறினார்.
தினசரி செலவும், கடைகளை நடத்துவதற்கான மேல்நிலைச் செலவும் அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில், எங்களுக்கு வழங்கப்படும் தொகையை கிலோவுக்கு 20 பைசா மட்டுமே அதிகரித்திருப்பது கொடூர நகைச்சுவையாக உள்ளது. எங்களுக்கு நிவாரணம் அளித்து, எங்களின் நிதி நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம் என அவர் பேசினார்.
AIFPSDF இன் தேசிய செயற்குழு புதன்கிழமை கூடும் என்றும், அதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். ஆர்ப்பாட்டத்தின் போது, தனது கோரிக்கைகளை முன்வைத்த பிரஹலாத் மோடி, ‘எனது சகோதரர் பிரதமரானால், நான் பட்டினியால் சாக வேண்டுமா’ என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். எனது சங்கத்துடன் தொடர்ந்து இருப்பதன் மூலம், அதன் அனைத்து முடிவுகளையும் ஆதரிப்பேன் என அவர் மேலும் கூறினார். எனினும் மீடியாக்களில் இவரது உரை பெரிதாக செய்திபோருள் ஆகவில்லை.
மம்தா மாடலை கோரும் மோடி சகோதரர்:
சரக்குகளை இலவசமாக விநியோகிக்கும் “மேற்கு வங்க ரேஷன் மாடலை” நாடு முழுவதும் மோடி அரசாங்கம் அமல்படுத்த வேண்டும் என்று மோடியின் சகோதரர் உட்பட அனைத்து போராட்டக்காரர்களும் கோரிக்கை வைத்தனர். ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் உட்பட அனைத்து மாநிலங்களுக்கும் நிலுவையில் உள்ள அனைத்து மார்ஜின்களும் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்று AIFPSDF தேசிய பொதுச் செயலாளர் பிஷ்வபர் பாசு தெரிவித்தார். நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் மற்றும் பருப்பு ஆகியவற்றிற்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை வைத்தார்.
மோடியின் சொந்த சகோதரரே போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்படும் வகையில் தான் மோடியின் ஆட்சி உள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது.