BJP Hindutva Karnataka Law and Order

கர்நாடகா: ‘காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் நாம் கற்களை வீசி எறிந்திரிருக்கலாம் ! ‘ – பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா ஆதங்கம் !

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால், பாஜகவின் யுவ மோர்ச்சா உறுப்பினர் பிரவீன் நெட்டாருவின் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பாஜகவினர் பொதுச் சொத்துக்களை அடித்து நொறுக்கி இருக்கலாம் என எம்.பி.யும், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவருமான தேஜஸ்வி சூர்யா பேசும் ஆடியோ கிளிப் பரவலாகப் பகிரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட அந்த ஆடியோ கிளிப்பில், பாஜக கட்சித் தொண்டர்கள் பெருமளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ராஜினாமா செய்வதை நிறுத்துமாறு சிக்கமகளூரு மாவட்ட யுவ மோர்ச்சா தலைவர் சந்தீப்பிடம் சூர்யா கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க காரியகர்த்தாக்களுக்கும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளிக்கிறார்.

நானும் இந்த கொலையால் கோபமாக உள்ளேன், எனினும் பாஜக ஆட்சியில் இருப்பதால் இப்போது நம்மால் எதுவும் செய்ய முடியாது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்திருந்தால், நாம் கற்களை வீசி எறிந்திருப்போம்.” என அந்த ஆடியோ கிளிப்பில் கூறுகிறார் பாஜக எம்பி தேஜஸ்வி.

அதே போல தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், “ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசால் பாதுகாப்பு அளிக்க முடியாது” என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். “உதய்பூரில், கன்ஹையா லால், வாடிக்கையாளர் போல் மாறுவேடமிட்டு அவரது கடைக்கு வந்தவர்களால் கொல்லப்பட்டார். மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு பாதுகாவலரை வழங்க முடியுமா?” என தேஜஸ்வி கேள்வி எழுப்பினார்.

டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் பாஜக தலைவர் சந்தீப்பை தொடர்பு கொண்டபோது, ​ஆடியோ “உண்மையானது” என்று ஒப்புக்கொண்டார், எனினும் தேஜஸ்வி சூர்யா “நோ கமெண்ட்ஸ்” என்று கூறி முடித்து கொண்டார்..