விளாடிமிர் புடின் தலைமையிலான ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் பல ரஷ்யா மீது தடை விதித்து, கண்டனமும் தெரிவித்தது. ஆனால் இந்தியா ரஷ்யா மீது எவ்விதமான தடையும் விதிக்கவில்லை. இந்நிலையில் 48வது ஜி7 மாநாட்டை நடத்த உள்ள ஜெர்மனி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது, அங்குள்ள ஜனநாயக அமைப்புகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து இந்தியா சாலிடாரிட்டி நெட்வொர்க், (வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் – என்ஆர்ஐ அமைப்பு) ஜெர்மனியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் தமிழாக்கத்தை கீழே தருகிறோம்.
“ஜூன் 26, 2022 அன்று, நரேந்திர மோடி ஜெர்மனியின் மியூனிக் நகருக்குச் சென்று, இங்குள்ள என்ஆர்ஐ சமூகத்துடன் உரையாட உள்ளார். இதற்குப் பிறகு, அவர் G7 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக Schloss Elmau க்குச் செல்ல உள்ளார், அங்கு அவர் ‘ஏகாதிபத்திய வடக்கை’ சேர்ந்த தனது நண்பர்களுடன் உணவருந்த உள்ளார்.
உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் சர்வாதிகாரிகளாக உருவெடுக்க உள்ளவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கக் கூடாது என்று நாங்கள் உறுதியாக நம்புவதால், மோடியின் ஜெர்மனி பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவோம்.
தன்னைத்தானே மிக உயர்வாக எண்ணிக் கொள்ளும் நபர்களை திருப்திப்படுத்துவதனால் கிடைக்கும் பலனை ஐரோப்பாவும், குறிப்பாக ஜெர்மனியும், சமீபத்தில் உக்ரைன் மீதான புட்டினின் மிருகத்தனமான படையெடுப்பின் மூலம் அறிந்து கொண்டுள்ளன.
ஜேர்மன் சான்சிலர், ஓலாஃப் ஸ்கோல்ஸ் சில வாரங்களுக்கு முன்பு தேசிய தொலைக்காட்சிக்கு ஒன்றில் , “நீ வீடர்!” (மீண்டும் ஒரு போதும் இல்லை) என்ற பிரபல முழக்கத்தை ஜேர்மனியர்களுக்கு நினைவூட்டினார். எனினும் அடுத்த நொடியே அவர் நரேந்திர மோடிக்கு சிவப்புக் கம்பளத்தை விரித்தாது அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இத்தகைய செயல்கள் “நீ வீடர்!” போன்ற முக்கிய முழக்கங்களின் அர்த்தத்தை வெறுமையாக்குகின்றன.
‘பேரரசின் எல்லைகளுக்கு’ வெளியே நடப்பது முக்கியமற்றது என்றும் அங்கு மனித உரிமை மீறல்கள் நடப்பததை பற்றி எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ஏகாதிபத்திய வடக்கில் உள்ள பலரைப் போலவே நம்புகிறார்.
அந்தக் கண்ணோட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம், மேலும் இந்தியாவில் மோடி ஆட்சியின் பாசிசம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒடுக்கப்பட்டவர்களுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். எங்களுடன் சேர்ந்து போராட்டக்களத்திற்கு வாருங்கள்! “
என இந்தியா சாலிடாரிட்டி நெட்வொர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.