பெயிண்டர் அக்ரம் அலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் குறித்து போலீசார் தாமாக முன்வந்து, அவர் மீது “பகைமையை ஊக்குவித்தல், மதத்தை அவமதிக்கும் நோக்குடன் செயல்படல் மற்றும் வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படல்” ஆகிய குற்றங்களை அக்ரம் மீது சுமத்தி அவரை கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி: சமூக வலைதளங்களில் உபி முதல்வர் ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக கூறி 19 வயது இளைஞனை உத்தரபிரதேச போலீசார் ஜூன் 13ம் தேதி திங்கள்கிழமை கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட அக்ரம் அலி , கஜ்னி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டெடாரியா கிராமத்தில் வசிக்கும் ஒரு பெயிண்டர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் அவர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக “ஆதித்யநாத்துக்கு எதிரான ஆட்சேபனைக்குரிய இடுகையை” பதிவேற்றியதாகவும் அது வைரலாகியதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
அக்ரம் அலி மீது போடப்பட்டுள்ள ஐபிசி பிரிவுகளை இங்கு நாம் கவனிக்க கடமைப்பட்டுள்ளோம் :
504 ( வேண்டுமென்றே அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படல்),
505 (சமூகங்களுக்கு இடையே பகை, வெறுப்பு அல்லது தீய எண்ணத்தை உருவாக்குதல் அல்லது ஊக்குவித்தல்),
469 (போர்ஜரி மூலம் நற்பெயருக்கு தீங்குவிளைவித்தல )
மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 295 (மதவழிபாட்டில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளை சீற்றமுற்று எழச் செய்ய வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் வேண்டுமென்றே பேச்சாலோ, எழுத்தாலோ, அல்லது ஜாடையாலோ ஒரு மதத்தை அல்லது மத உணர்வுகளை புண்படுத்தல்)
மேற்கண்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கஜ்னி காவல் நிலையப் பொறுப்பாளர் இக்ரார் அகமது தெரிவித்தார்.
ஆதித்யநாத் பற்றிய “ஆட்சேபனைக்குரிய” இடுகையைப் பகிர்ந்ததற்காக 15 வயது சிறுவனை குற்றவாளியாக அறிவித்து இந்த ஆண்டு மே மாதம், உத்தரபிரதேசத்தில் உள்ள சிறார் நீதி வாரியம், அந்த மைனர் சிறுவனை பசுக்கள் காப்பகத்தில் 15 நாட்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும், பின்னர் மேலும் 15 நாட்களுக்கு பொது இடத்தை சுத்தம் செய்யவும் உத்தரவிட்டது.
மார்ச் மாதம், முதல்வர் ஆதித்யநாத் மற்றும் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆகியோரின் ஆட்சேபகரமான படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக 24 வயது நபர் ஒருவர் கவுதம் புத் நகரில் கைது செய்யப்பட்டார்.
மே 2020 இல், ஆதித்யநாத் பற்றி ஃபேஸ்புக்கில் ‘ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை’ தெரிவித்ததாக அலகாபாத்தை சேர்ந்த ஒருவர் மீது “தேசத்துரோக வழக்கு” பதிவு செய்யப்பட்டது.
தேசத்துரோக வழக்கின் பின்னணி:
‘பிரியங்கா காந்தி வத்ரா ஏன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உத்தரப் பிரதேச போக்குவரத்துக் கழக பேருந்துகளை வாடகைக்கு எடுக்கவில்லை என்று எனக்குப் புரியவில்லை?’ என்று அலகாபாத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சுக்லா என்ற ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் பதிந்திருந்தார்.
“இந்தப் பதிவில், அலகாபாத்தில் வசிக்கும் அனூப் சிங், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார். அவர், “யோகி குத்தா ஹை இஸ் லியே (யோகி ஒரு நாய் என்பதால் தான்)” என்றார். இதனை தொடர்ந்து அவர் மீது “தேசத்துரோக வழக்கு” பதிவு செய்யப்பட்டது.