Crony Capitalists Indian Economy

அனில் அம்பானிக்கு வெளிநாட்டில் ரூ800 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு!

அனில் அம்பானி முன்பு செல்வந்தர்தான் ஆனால் இப்போது அவரிடம் எதுவும் இல்லை என லண்டன் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் வாதம் வைத்திருந்த நிலையில் தற்போது அது பொய் என அம்பலம் ஆகியுள்ளது.வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள், பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், ரூ800 கோடிக்கு மேல் அனில் அம்பானிக்கு சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் முதலீடுகள், கணக்கில் வராத சொத்துகள், இருப்பது உறுதியானதையடுத்து, 2015 கருப்புப் பணச் சட்டத்தின் (பிஎம்ஏ) கீழ் ரிலையன்ஸ் (ADA) குழுமத்தின் தலைவர் அனில் அம்பானிக்கு எதிராக 2019 இல் முதல்முறையாக கணக்கில் வராத வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பாக அனில் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, கருப்புப் பணச் சட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில், வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள், பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், ரூ800 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தொகை, தற்போதைய ரூபாய்-டாலர் மாற்று விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அனுப்பபட்ட நோட்டீஸூக்கு அனில் அம்பானிபதிலளிக்கவில்லை. பிப்ரவரி 2020 இல், அனில் அம்பானி லண்டன் நீதிமன்றத்தில் தன்னுடைய நிகர மதிப்பு (Net worth) பூஜ்ஜியம் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது குட்டு வெளியாகியுள்ளது.

பஹாமாஸ், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் ஆகிய பகுதிகளில் வெளிநாட்டு நிறுவனங்களின் பெனிஃபிஷியல் ஓனர்ஷிப் அனில் அம்பானியிடம் இருப்பதை கருப்பு பண சட்டம் விளக்குகிறது.

பஹாமாஸில், டிரீம்வொர்க் ஹோல்டிங்ஸ் இன்க் என்ற ஆஃப்ஷோர் நிறுவனத்துடன் 2006 இல் டயமண்ட் அறக்கட்டளை நிறுவப்பட்டது. இந்நிறுவனம் யூபிஎஸ் வங்கியின் சூரிச் கிளையில் இணைக்கப்பட்ட சுவிஸ் வங்கிக் கணக்கு வைத்திருப்பது தெரிய வந்தது.

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் 2010 இல் அனில் அம்பானியால் இணைக்கப்பட்ட மற்றொரு அறிவிக்கப்படாத ஆஃப்ஷோர் நிறுவனம் நார்த் அட்லாண்டிக் டிரேடிங் அன்லிமிடெட் ஆகும். இந்த நிறுவனம் சைப்ரஸ் வங்கியுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பட்டியலிட்ட பண்டோரா பேப்பர்ஸ்” ஆவணத்தில் அனில் அம்பானியுடன் இணைக்கப்பட்ட 18 நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

மேலும், இந்த வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் “கணிசமான” பரிவர்த்தனைகள் நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

கருப்பு பண சட்டம் 2015இன் கீழ் அனில் அம்பானிக்கு எதிராக இறுதி உத்தரவு நிறைவேற்றப்பட்டுள்ளது. விசாரணையில் சிக்கிய கணக்கு விவரம், ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில், இறுதி உத்தரவு அனுப்பப்பட்டது.

2015 ஆம் ஆண்டு “சுவிஸ் லீக்ஸ்” விசாரணையில், ஹெச்எஸ்பிசியின் ஜெனீவா கிளையில் கணக்கு வைத்திருந்த 1,100 இந்தியர்களில் அனில் அம்பானியும் ஒருவர் என்பது தெரியவந்தது. 2006-07 ஆம் ஆண்டிற்கான HSBC கணக்கில் அவரது இருப்பு 26.6 மில்லியன் டாலர் ஆகும்.