முஹமத் நபிக்கு எதிரான கருத்துகளுக்கு இந்திய அரசிடமிருந்து பகிரங்க மன்னிப்பு மற்றும் உடனடி கண்டனத்தை எதிர்பார்ப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது.
கத்தார் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்திய தூதர் தீபக் மிட்டலை வரவழைத்து, பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்களாக இருந்த நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால், முஹம்மத் நபிக்கு எதிராக கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக கடும் அதிருப்தி மட்டுமின்றி, அக்கருத்துக்களை முழுமையாக நிராகரித்து, கண்டனத்தை வெளிப்படுத்தும் அதிகாரப்பூர்வ குறிப்பை அவரிடம் அளித்தது.
நுபூர் ஷர்மாவை இடைநீக்கம் செய்து ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கான பாஜக அரசாங்கத்தின் நடவடிக்கையை கத்தாரில் உள்ள அதிகாரிகள் வரவேற்றாலும், அவர்கள் பகிரங்க மன்னிப்பு மற்றும் சர்ச்சைக்குரிய அறிக்கைகளுக்கு உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கத்தார் அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
“இதுபோன்ற இஸ்லாமிய வெறுப்பு கருத்துக்கள் தண்டனையின்றி தொடர அனுமதிப்பது, மனித உரிமைகளின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும், மேலும் தப்பெண்ணம் மற்றும் விளிம்பு நிலைக்கு வழிவகுக்கும்”
“அவமானகரமான இவ்வாறான கருத்துக்கள் மத வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கு வழிவகுக்கும், மேலும் உலகெங்கிலும் உள்ள இரண்டு பில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்களை புண்படுத்தும், மேலும் இந்தியா உட்பட, உலகெங்கிலும் உள்ள நாகரிகங்களின் வளர்ச்சியில் இஸ்லாம் ஆற்றிய முக்கிய பங்கு பற்றிய தெளிவான அறியாமையை சுட்டிக்காட்டுகிறது..”
என்று கத்தார் அரசு அறிக்கை தெரிவிக்கிறது.
இதைத் தொடர்ந்து, கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம், “இந்த ட்வீட்கள் எந்த வகையிலும், இந்திய அரசின் கருத்துக்களைப் பிரதிபலிக்கவில்லை. இவை (சமூகத்தில் முக்கியத்துவம் இல்லாத) சிறு கூட்டத்தினரின் கருத்துக்கள்” என்று தெரிவித்துள்ளது..
பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரின் கருத்துகளை ‘பரிஞ் எலிமென்ட்ஸ்’ கருத்துகள் என கூறியதில் இருந்து அந்தர் பல்டி அடித்துள்ளது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“நமது நாகரிக பாரம்பரியம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற வலுவான கலாச்சார மரபுகளுக்கு ஏற்ப, இந்திய அரசு அனைத்து மதங்களுக்கும் மிக உயர்ந்த மரியாதை அளிக்கிறது. இழிவான கருத்துக்களை தெரிவித்தவர்கள் மீது ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்று தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“இந்தியா-கத்தார் நட்புறவுக்கு எதிராக உள்ள சிலர் (நபிகள் குறித்த) இந்த இழிவான கருத்துக்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டி வருகின்றனர். நமது இருதரப்பு உறவுகளின் வலிமையைக் குறைக்கும் நோக்கத்தில் உள்ள இத்தகைய விஷமிளுக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்று இந்திய தூதரகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நெருக்கடி முற்றிய நிலையில், வேறு வழியின்றி, நபிகளுக்கு எதிராக இழிவான கருத்துகளை தெரிவித்ததற்காக நுபூர் மன்னிப்பு கேட்டுள்ளார்.