கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலக அறை ஒன்றினுள் இரண்டு பெண்கள் தொழுகை ஈடுபட்டுள்ளதை அத்துமீறி வீடியோ பதிவு செய்து அதனை வெளியிட்ட வலதுசாரி சமூக ஊடகச் சேனலின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளளர்.
‘சம்வதா’ சேனலுக்கு எதிராக விதான் சவுதா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்தவர் என்.ஜி.தினேஷ். இந்திய தண்டனை சட்டம், பிரிவுகள் 447 (கிரிமினல் அத்துமீறல்) மற்றும் 505-(2)ன் (வகுப்புகளுக்கு இடையே பகை, வெறுப்பு அல்லது தவறான எண்ணத்தை உருவாக்கும் அல்லது ஊக்குவிக்கும் செயல்பாடுகள்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மே 14 அன்று கன்னடத்தில் ‘கர்நாடகா ஹை கோர்ட்நல்லி நமாஸ்’ (கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நமாஸ்) என்ற தலைப்பின் கீழ் 1.48 நிமிட வீடியோவை பதிவேற்றப்பட்டது குறித்து எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்து வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி படமாக்கப்பட்ட வீடியோ காட்சிகள், இரு சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்புகிறது. வீடியோவைப் படம்பிடித்து பதிவேற்றியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோருகிறோம்,” என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பார் & பெஞ்ச் தெரிவித்துள்ளது.