மகாராஷ்டிராவில் முந்தைய தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் போது பாரதீய ஜனதா கட்சி அல்லது ஆர்எஸ்எஸின் அனுதாபிகளாக இருந்து பணியாற்றிய அரசாங்க அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள் முதலமைச்சர் (முதல்வர்) உத்தவ் தாக்கரேவை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை வைத்தனர். மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் பொலிஸ் இடமாற்றங்களில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தவும் கோரிக்கை வைத்தனர்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் நானா படோல் தலைமையிலான காங்கிரஸ் குழு முதல்வரைச் சந்தித்து பாஜகவின் சதிகளை முறியடிக்க வலுவான கூட்டு நடவடிக்கை தேவை என கோரியது.
ஃபட்னவிஸின் ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் ஆட்களை நியமித்தது குறித்த விவரங்களை எதிர்க்கட்சி முதலில் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும் “முந்தைய மாநில பாஜக ஆட்சி மத்திய அரசாங்கத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் அரசியல் லாபத்திற்காக அரசு அதிகாரிகளை தவறாகப் பயன்படுத்தியது.” எனவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
“ஃபட்னாவிஸ் அரசாங்கத்தின் போது மாநில அரசாங்கத்தில் பல பாஜக-ஆர்எஸ்எஸ் அனுதாபிகள் இருந்தனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அவர்களிடமிருந்து என்ன நன்மைகளைப் பெற்றன என்பது குறித்து ஆராயப்பட வேண்டியது அவசியம், அதற்கான கோரிக்கையை நாங்கள் முதல்வரிடம் கோரியுள்ளோம், ”என்று திரு. படோல் கூறினார்.
“பரம்பிர் சிங் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் விசாரணை நடத்தப்படாவிட்டாலும் மாநில உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்று நாங்கள் கருதுகிறோம். உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற அல்லது பணியாற்றும் நீதிபதியின் விசாரணைக் குழுவை மாநில அரசு உடனடியாக நியமிக்க வேண்டும். பாஜகவின் உத்தரவின் பேரில் சிங் செயல்பட்டார் என்றும் முன்னர் எதிர்க்கட்சிகளின் பெயரை கெடுக்கும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஆனால் அதே நேரத்தில், எம்.வி.ஏ அரசாங்கத்தின் பெயருக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். சிங் மற்றும் பிற அதிகாரிகள் மீது அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ”என்று காங்கிரஸ் குழுவின் ஒரு பகுதியாக இருந்த ஒரு கட்சித் தலைவர் கூறினார்.