உத்தரபிரதேச பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா கடந்த புதன்கிழமையன்று முஸ்லீம் பெண்கள் ‘புர்கா’ அணிவதில் இருந்து “விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறினார். இதை தீய வழக்கம் என்று வர்ணித்த அவர், இதனை இந்தியாவில் தடை செய்யப்பட்ட மூன்று தலாக் சட்டத்துடன் ஒப்பிட்டு பேசினார்.
மசூதிகளில் ஒலிபெருக்கிகள் காரணமாக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், நீதிமன்ற உத்தரவுகளின்படி சப்தத்தின் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் கூறி, பல்லியா மாவட்ட மாஜிஸ்திரேடுக்கு அமைச்சர் எழுதிய கடிதம் எழுதியுள்ள ஒரு நாள் கழித்து ஆனந்த் இவ்வாறு பேசியுள்ளார்.
“முஸ்லீம் பெண்கள் முத்தலாக் போன்றே புர்காவிலிருந்தும் விடுவிக்கப்படுவார்கள். அவர்கள் அதை அகற்றும் ஒரு காலம் வரும். பல முஸ்லீம் நாடுகள் உள்ளன, அங்கு ‘புர்கா’ தடை செய்யப்பட்டுள்ளது” என்று சுக்லா செய்தியாளர்களிடம் ஆதாரங்கள் ஒன்றையும் சுட்டி காட்டாமல் கூறினார்.
உத்தரபிரதேச நாடாளுமன்ற அமைச்சரான ஆனந்த் சுக்லா, ‘புர்கா’ என்பது “மனிதாபிமானமற்ற தீய வழக்கம்” என்றும், முற்போக்கான சிந்தனை உள்ளவர்கள் அதைத் தவிர்த்து வருவதாகவும், அதன் பயன்பாட்டிற்கு அழுத்தம் தருவதில்லை என்றும் கூறினார்.