திலாவர், அவரது தந்தை ரபாக்கத் அலி, அவரது தாயார் மற்றும் அவரது சகோதரி ஆட்டு மந்தையின் பின்னால் நடந்து கொண்டிருந்தபோது ஒரு கார் அவர்கள் வழியில் வந்தது. அதிலிருந்து மூன்று ஆண்கள் இறங்கினர். திலாவரின் சகோதரியை நோக்கி வந்த அவர்கள், சகோதரியைப் பிடித்து காரில் இழுத்து போட முயன்றனர்.
உடனே திலாவரும் அலியும் மூவரையும் தள்ளி, அவர்களின் பிடியிலிருந்து பெண்ணை விடுவித்தனர். உடனே தாயிடம் ஓடினார் பாதிக்கப்பட்ட பெண்.
சிறிது நேரத்தில் மூவரும் எங்களை தாக்க ஆரம்பித்தனர்; “அவர்கள் எங்களை கம்புகளை கொண்டு அடித்தார்கள்,” “தாக்குதலில் என் சகோதரி மற்றும் தாயும் காயமடைந்தனர்.” என்கிறார் திலாவர்.
இந்த சம்பவம் ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 7:30 மணியளவில் நடந்தது. 307 (கொலை முயற்சி) மற்றும் 354 (வன்முறையால் பெண்ணை மானபங்கப்படுத்துதல்) ஆகிய சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக சம்பா காவல் நிலையத்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பம்:
பக்கர்வால் இனத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்பம், கால்நடைகளை வளர்ப்பது மற்றும் பருவகால பயணங்களை மேற்கொள்வது என வாழ்பவர்கள். பெரும்பாலும் இவர்கள் முஸ்லிம்களே. தற்போது மாவட்டத்தின் சோன்வாலி மண்டி கிராமத்தில் வசிக்கின்றனர்.
கொடூர தாக்குதல்:
அம்மூவரும் தங்களைத் தாக்க அதிகமானவர்களை அழைத்ததாக திலாவர் கூறுகிறார். “முதலில் அவர்கள் மூன்று பேர், ஆனால் பின்னர் அவர்கள் ஒரு தொலைபேசி அழைப்பு செய்தார்கள், 50-60 இந்துக்கள் எங்களைச் சுற்றி திரண்டனர்.” திலாவரின் மூக்கு மற்றும் வாயிலிருந்து இரத்தம் வந்ததாகவும், அவரது தந்தை கொடூரமாக தாக்கப்பட்டதில் “மயக்கமடைந்துவிட்டார்” எனவும் கூறுகிறார்.
அவரது சகோதரி புத்திசாலித்தனமாக நடந்து கொண்டார் – அவர் தனது மாமாவுக்கு அழைப்பு விடுத்தார், அவர் காவல் நிலையத்திற்கு விரைந்தார்.
ஒரு போலீஸ் குழு அவர்களை மீட்க வந்தது. மயக்கமடைந்த அலியை சம்பா நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கிருந்து அவர் ஜம்மு நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மிரட்டல்:
ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், “எங்களுக்கு எதிராக குரல் எழுப்பினால், குடிசைகளை எரிப்போம்” என்று தாக்குதல் நடத்தியவர்கள் மீண்டும் அச்சுறுத்தினர் என்கிறார் திலாவர். குடும்பத்தினர் மருத்துவமனை செல்வதும் வருவதுமாக மும்முரமாக இருந்ததால் அவர்களது கால்நடைகள் சில காணவில்லை என்று திலாவர் கூறினார்.
வெறுப்பு தாக்குதல்:
ஜம்மு பிராந்தியத்தில் இந்துகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பழங்குடி முஸ்லிம்களுக்கு எதிராக நிலவும் வெறுப்பு வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதலை சமூக ஆர்வலர்கள் பார்க்கின்றனர்.
ஆசிபா கொடூரம்:
2018 ஆம் ஆண்டில் கொடூரமாக கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்டு வயது ஆசிஃபா பானு இதே பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர். இக்கொடூரமான சம்பவம் இப்பகுதியை உலுக்கியதுடன், முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான பெரும்பான்மை வன்முறை பிரச்சினையாக பேசப்பட்டது. அன்றைய பாஜக-பிடிபி அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் உட்பட தீவிர இந்துத்துவா குழுக்கள் பழங்குடியின முஸ்லிம்கள் மீதான வகுப்புவாத வெறுப்பை உமிழ்ந்து, கற்பழிப்பாளர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டன.
தொடர் அச்சுறுத்தல்:
ஜம்முவில் உள்ள பழங்குடி இளைஞர் ஆர்வலர் குப்தார் சவுத்ரி கூறுகையில், “இந்த விஷயங்கள் கடந்த ஐந்து-ஆறு ஆண்டுகளாக ஒரு வழக்கமான அடிப்படையில் நடந்து கொண்டிருக்கின்றன. “இது ஒரு தனி சம்பவம் அல்ல . பழங்குடியினர் குடும்பங்கள் தொடர்ந்து இவ்வாறான பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். ” என்கிறார்.
திலாவரும் தங்கள் சமூகத்திற்கு எதிரான முதல் சம்பவம் இது அல்ல என்று கூறினார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் உள்ளூர் இந்துக்களால் தாக்கப்பட்டதாகவும், அந்த வழக்கில் காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்து, ‘இதுபோன்ற தாக்குதல்களை மீண்டும் நடைபெறாமல் பார்த்து கொள்வதாக உறுதியளித்தார்.’ என்கிறார் அவர்
இதுவரை கைது இல்லை:
சம்பாவில் உள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை இன்னும் அடையாளம் காணவில்லை என்பதால் அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்கின்றனர். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக சம்பா எஸ்.எச்.ஓ கூறினார்.
தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்கள் தங்களுக்கு தெரியாது, ஆனால் பார்த்தால் அவர்களை அடையாளம் காண முடியும் என்றார் திலாவர். “அவர்கள் இந்து சமூகத்தைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்” என்று அவர் மேலும் கூறினார்.