அகமதாபாத்: 2004 இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி ஜி.எல். சிங்கால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடர குஜராத் அரசு அனுமதி மறுத்துள்ளது என்று மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) சனிக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சிறப்பு நீதிபதி வி.ஆர்.ராவலின் உத்தரவின் பேரில் சிங்கால், தருண் பரோட் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரைத் தண்டிக்க சிபிஐ மாநில அரசிடம் அனுமதி கோரியது. உத்தியோகபூர்வ கடமையை நிறைவேற்றுவதில் தவறி இருந்தாலும், அரசு ஊழியர்களைத் தண்டிக்க மாநில அரசின் அனுமதி தேவை என்கிறது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 197 வது பிரிவு.
“குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும் எதிராக வழக்குத் தொடர குஜராத் அரசு அனுமதி மறுத்துள்ளது. கடிதத்தை நாங்கள் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம், ”என்றார் ஆர்.சி. கோடேகர், சிறப்பு வழக்கறிஞர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சிங்கால், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் பரோட் மற்றும் ஜே.ஜி. பர்மர் மற்றும் சவுத்ரி ஆகியோர் நீதிமன்றத்தில் “தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்” என்று கோரி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளனர். இத்தனை ஆண்டுகளாக வழக்குகள் நடைபெற முறுப்புறம் பர்மர் இறந்தார்.
2020 அக்டோபர் உத்தரவில், காவல்துறை அதிகாரிகள் “உத்தியோகபூர்வ அலுவல் நேரத்தில் இருந்தனர்” என்று நீதிமன்றம் அவதானித்தது, எனவே சிபிஐ வழக்கு, அரசின் அனுமதி பெற வேண்டும் என்றானது. 2019 ஆம் ஆண்டில், சிபிஐ நீதிமன்றம் முன்னாள் காவல்துறை அதிகாரிகளான டி.ஜி.வன்சாரா மற்றும் என்.கே.அமீன் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை கைவிட்டது. 2018 ஆம் ஆண்டில், முன்னாள் போலீஸ் தலைமை இயக்குநர் பி.பி.பாண்டே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சிபிஐ 2013 ஆம் ஆண்டில் தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் பாண்டே, வன்சாரா, அமீன், சிங்கால், பரோட், பர்மர் மற்றும் சவுத்ரி ஆகிய ஏழு காவல்துறை அதிகாரிகளை குற்றவாளிகளாக பெயரிட்டது.
மும்பை அருகே மும்பிராவைச் சேர்ந்த 19 வயதான இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக் (எனும் பிரனேஷ் பிள்ளை), அம்ஜதலி அக்பரலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹர் ஆகியோரை குஜராத் போலீசார் ஜூன் 15, 2004 அன்று அகமதாபாத் அருகே நடந்த ஒரு ‘என்கவுண்டரில்’ ஈவு இரக்கமின்றி சுட்டு கொன்றனர்.
தக்க ஆதாரமில்லாமல் கொல்லப்பட்ட நான்கு பேரும் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள் என்று போலீசார் கூறினர். இருப்பினும், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு இந்த ‘என்கவுண்டரில்’ போலியானது என்று திட்டவட்டமாக தெரிவித்தது, அதன் பின்னர் சிபிஐ, போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். நீதி என்பது கிடைக்காமலே போனது.