கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மத்திய விசாரணை நிறுவனமான அமலாக்க இயக்குநரகம் (இ.டி) மீது கேரள காவல்துறை வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளது. கேரள முதலமைச்சருக்கு எதிராக பொய்யாக குற்றம்சாட்டிட அமலாக்க துறை அதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தியதாக ஸ்வப்னா கூறியுள்ளதன் அடிப்படையில் கேரள போலீசார் இவ்வழக்கை பதிவு செய்துள்ளனர்.
சதி, அச்சுறுத்தல் மற்றும் தவறான அறிக்கையை சமர்ப்பிக்க கட்டாயப்படுத்துதல் போன்ற ஜாமீனில் வெளிவராத குற்றங்களின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, குற்றப்பிரிவு (கிரைம் பிரான்ச்) போலீசார் நடத்திய விசாரணையின் ஒரு பகுதியாக ஸ்வப்னா சுரேஷ் உட்பட 18 பேரின் வாக்குமூல அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாநில உள்துறை செயலாளர் அமலாக்க துறைக்கு எதிராக வழக்கு பதிவு செய்யலாம் என்று சட்ட ஆலோசனையைப் பெற்றார். அதன் பேரிலேயே தற்போது இந்த வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.
மேலதிக விசாரணைக்கு குற்றப்பிரிவின் சிறப்புக் குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெண் காவல்துறை அதிகாரிகளான பலாரவத்தம் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிஜி விஜயன் மற்றும் கடவந்த்ரா காவல் நிலையத்தைச் சேர்ந்த எஸ். ரெஜிமோல் ஆகியோரும் அமலாக்கத்துறையினரின் விசாரணையின் போது முதல்வருக்கு எதிராக ஸ்வப்னாவை தவறான அறிக்கை கொடுக்க கட்டாயப்படுத்தியதாக அறிக்கை அளித்தனர். இதன் அடிப்படையில் ED க்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது..