திமுகவின் தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டத்தை அங்கீகரிக்கின்ற வகையில் இருக்கின்ற வாசகங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ‘இதுதான் நியாயமா?’ என நல்லிதயங்களைத் துடிக்க வைப்பவையாய் இருக்கின்றன.
நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் கூறுபோட்டு பாகுபாடு காட்டுவது திராவிட சித்தாந்தத்துக்கு நேர் எதிரானதாகும். அதற்குத் துணை போகின்ற வகையில் திமுக தேர்தல் அறிக்கை இருப்பது தகுமா?
இந்திய வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடந்த சிஏஏ எதிர்ப்பு மக்கள் போராட்டத்தையும், தன்னெழுச்சியாக நடந்த மகளிர் ஷாஹீன் பாக் போராளிகளையும், உயிரையே கொடுத்த உயிர்த்தியாகிகளையும் கொச்சைப்படுத்துவதாக திமுகவின் தேர்தல் அறிக்கையின் அந்த ஒற்றை வாசகம் அமைந்து விட்டது பெருந்துயரமே.
நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட ஆன்மாவுக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும், சமத்துவம், சுதந்தரம், நீதி, சகோதரத்துவம் போன்ற மாண்புகளுக்கும் உலை வைக்கக் கூடியதாய் இருந்த சிஏஏ சட்டத்தை ஆதரிக்கின்ற வாசகங்கள் திமுக வின் தேர்தல் அறிக்கையில் இருப்பது சரியா?
ஒரு தாய் பிள்ளைகளாய் ஒன்றாய் வாழ்கின்ற மக்களை மதத்தின் அடிப்படையில் கூறு போட்டு அற்ப அரசியல் ஆதாயங்களைத் தேடுவதற்காகக் கொண்டு வரப்பட்ட விஷமத்தனமான சட்டத்தை ஆதரிக்கின்ற வாசகங்கள் திமுக வின் தேர்தல் அறிக்கையில் இருப்பது முறையா? உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத கொடூரச் சட்டத்தை ஆதரிக்கின்ற வாசகங்கள் திமுகவின் தேர்தல் அறிக்கை இருப்பது தகுமா?
வரலாற்றிலேயே மிகச் சிறப்பான, அழகான, நேர்த்தியான, மக்கள் நலன்களை மட்டுமே மையமாகக் கொண்ட அருமையான ஆவணமாக தேர்தல் அறிக்கையை ஆயத்தப்படுத்திவிட்டு அதில் சிஏஏ சட்டத்தை ஆதரிக்கின்ற வாசகங்களையும் சேர்த்துவிட்டிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
பாசிச எதிர்ப்பாளர்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாக கூட கருதவில்லை என்பதையே இந்த தேர்தல் அறிக்கை காட்டுகிறது.தேர்தல் அறிக்கைகள் திருத்தப்பட்ட வரலாறுகள் உண்டு.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடியுரிமை சட்டம் தொடர்பாக நிச்சயம் திருத்தம் தேவை என பாசிச எதிர்ப்பு சிந்தனை கொண்ட மக்கள் கருத்தை முன் வைக்கின்றனர்.
பாசிசத்தை எதிர்த்தாக வேண்டிய மனநிலையில் இருப்பவர்களுக்கு நம்மை விட்டால் வேறு யார் இருக்கின்றார்கள்? என்ன செய்தாலும் தாங்கிக் கொள்வார்கள் என்றா நினைத்துக் கொண்டீர்கள்?
சாமான்யர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். சாமான்யர்கள் நினைத்தால் நோட்டாவைக் கூட வெற்றி பெற வைப்பார்கள்.
ஆக்கம்: அஜீஸ் லுத்புல்லாஹ்