கேரளாவின் தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் நாயர், கேரள முதல்வர் பினராயி, பிற மாநில அமைச்சர்கள் மற்றும் இந்த வழக்கில் ஒரு முக்கிய நபரின் மகன் ஆகியோரை பெயரிடுமாறு அமலாக்க இயக்குநரகத்தின் (ED) விசாரணை அதிகாரியால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார். எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் சந்தீப் நாயர் இதை தெரிவித்துள்ளார். இது குறித்து தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் பணமோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு தலைமை தாங்கும் பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட சில முக்கிய நபர்களை பெயரிட்டால் சந்தீப்பின் ஜாமீன் விண்ணப்பத்தை எதிர்க்க மாட்டேன் என்று ராதாகிருஷ்ணன் கூறியதாக சந்தீப் அக்கடிதத்தில் எழுதி உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக சந்தீப் எட்டு மாதங்களாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். இப்போது அவர் திருவனந்தபுரத்தில் உள்ள பூஜாப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சிறையில் சித்திரவதை செய்யப்படுவதாகவும், தூங்க அனுமதிக்கபடுவதில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.