Hindutva Karnataka

மங்களூரு: கோவில் உண்டியலை திருடிய பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்தவர் கைது..

மங்களூரில் உள்ள மான்டேபடாவ் பகுதியில் இந்துத்துவா இயக்கமான பஜ்ரங் தளத்தை சேர்ந்த ஒருவர் கோயிலின் உண்டியலை திருடி, கையும் களவுமாக சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இவரை பிடித்த உள்ளூர்வாசிகள், கோனாஜே போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்டவர் அப்பகுதியில் இரு சக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. முன்னதாக அவர் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பில் அங்கம் வகித்துள்ளார். இது குறித்து உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

திருட்டில் ஈடுபட்டவர் மோன்டேபாதாவைச் சேர்ந்த தரநாத் என்கின்ற மோகன் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

கோயில் உண்டியல் மட்டுமில்லாமல் அப்பகுதியில் உள்ள வீடுகளில் தங்க நகை, பாக்கு மர கொட்டைகள் அடங்கிய பைகள், அவரது சொந்த நண்பரின் பைக்கில் இருந்து பெட்ரோல் என அவரது திரட்டு சாகச பட்டியலை அடுக்கி கொண்டே போகின்றனர் போலீசார்.

கடந்த சனிக்கிழமை, மான்டேபடவில் உள்ள ஒரு வீட்டின் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடி கொண்டு தப்பிச் சென்றுள்ளார் தரநாத். வீட்டு உரிமையாளர்கள் சி.சி.டி.வி காட்சிகளை வைத்து, திருடனின் அடையாளத்தை மேலும் அறிய பல்வேறு நபர்களுடன் கலந்துரையாடிய பின்னர், திருட்டில் ஈடுபட்டவர் தரநாத் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு அவர்கள் தரநாதின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் தப்பி ஓட முயன்றுள்ளார், அப்போது உள்ளூர்வாசிகளால் பிடிக்கப்பட்டார். பின்னர் அவரை கோனாஜே போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பாக கோனாஜே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட தரநாத் விரஞ்சநேயநகரின் பஜாரங் தளம் பிரிவின் கன்வீனர் ஆவார், முன்னதாக மான்டேபடவ் ஷரத் நகரின் விஸ்வ இந்து பரிஷத்தில் அங்கம் வகித்தவர். இந்துத்துவ அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தீவிரமாக பங்கேற்பவர் என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.