Muslims Uttar Pradesh

உபி : முபாரக் கான் தர்காவை இடிக்க தடை விதித்து இடைக்கால உத்தரவிட்டது உச்சநீதிமன்றம் !

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள தர்கா முபாரக் கான் ஷஹீத்தில் அமைந்துள்ள எந்தவொரு கட்டமைப்பையும் இடிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம், உபி அரசுக்கு திங்களன்று நோட்டீஸ் அனுப்பியது. புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் தனது மிகப் பிரபலமான கதைகளில் ஒன்றான ‘இத்கா’வை தர்கா முபாரக் கான் ஷஹீதில் வைத்து எழுதினார், இது தர்காவை பிரபலமாக்கியது.

இந்த விவகாரத்தில் நீதிபதி நவின் சின்ஹா மற்றும் நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரபிரதேச மாநிலத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஈத்காவின் தெற்குப் பகுதியில் முபாரக் கான் ஷஹித் கல்லறை மற்றும் மசூதி கல்லறை இருப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இங்கு ரமலான் மற்றும் பக்ரித் போன்ற முக்கியமான பண்டிகைகளில் பிரார்த்தனை செய்வதற்காக முஸ்லீம் சமூகத்தால் பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் இந்து மற்றும் இஸ்லாமிய சமூக மக்கள் தினமும் ஏராளமாக வந்து செல்லும் இடம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தர்காவை இடிக்க அனுமதிக்கும், 2021 பிப்ரவரி 10 தேதியிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் தர்காவை இடிப்பதை விட்டும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.