ஒரு சுருக்கமான பின்னணி…
இந்திய சுதந்திரம் உலகளாவிய பல மாற்றங்களின் பின்னணியில் உருவானது. ஐ.நா அவை உருவாக்கம், உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ஆகிய பின்னணியில் நமது அரசியல் சட்ட அவையில் விவாதங்கள் நடந்து பல நல்ல கூறுகளுடன் இந்திய அரசியல் சட்டம் 1951 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.. அப்போதே நமது ஆட்சியாளர்கள் அன்றைய பொதுவுடைமைப் புரட்சிகளையும் அதன் இந்திய எதிரொலிகளையும் சுட்டிக் காட்டி பிரிட்டிஷ் அரசு காலத்திய தடுப்புக்காவல் சட்டம் ஒன்று இருண்ட்து என்றாலும் பெரிய அளவில் செயல்படுத்தப்படவில்லை. இந்திய நீதிமன்றங்களும் தொடக்க காலத்தில் சில நல்ல தீர்ப்புகளையும் அளித்தன.
எனினும் தொடர்ந்து மத்தியில் ஆளவந்த அரசுகள் அரசியல் சட்டத்தில் இருந்த சில அடிப்படை உரிமைகளுக்குக் கட்டுப்பாடுகளை உருவாக்கும் திருத்தங்களைத் தொடர்ந்து மேற்கொண்டன. அரசியல் சட்டம் வழங்கிய பேச்சுரிமை மற்றும் கூட்டம் கூடும் அடிப்படை உரிமைகளுக்கு “நியாயமான கட்டுப்பாடுகள்” (reasonable restrictions)” என்பது உருவாக்கப்பட்டு இந்திய அரசியல் சட்ட்த்தில் முதல் திருத்தம் (A 19) உருவாக்கப்பட்டது.
அடுத்து சீன இந்தியப் போரில் இந்தியா எதிர்கொண்ட தோல்வி, மற்றும் தமிழகத்தில் தி.முக முன்வைத்த பிரிவினைக் கோரிக்கை ஆகியவற்றின் பின்னணியில் “இந்திய ஒருமை மற்றும் இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் நியாயமான கட்டுப்பாடுகள்” (reasonable restrictions in the interest of the sovereignty and the integrity of India) – எனக் கூறி 1963 இல் அரசியல் சட்டத்தின் 16 ஆவது திருத்தம் -19(2)- இயற்றப் பட்டது.
இந்தப் பின்னணியில்தான் 1967 டிசம்பர் 30 அன்று UAPA எனும் “சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்” (Unlawful Activities Protection Act) இயற்றப் பட்டது.
பெரிய அளவில் இந்தச் சட்டம் தொடக்க காலத்தில் சர்ச்சைக்கு உள்ளாகாமல் இருந்தது. ஆனால் ‘தடா’ (TADA) போன்ற பல கொடுஞ் சட்டங்கள் இயற்றப்பட்டு, அன்று பெரிய அளவில் அவை பயன்படுத்தவும் பட்டன.
தடா, பொடா போன்ற தடுப்புக்காவல் சட்டங்களுக்கும் UAPA வுக்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு என்னவெனில் தடா முதலியன தற்காலிகச் சட்டங்கள்.
இரண்டு அல்லது மூன்றாண்டுகள் எனக் காலகெடு அறிவிக்கப்பட்டு உருவாக்கப்படுபவை. அரசு நினைத்தால் பின் நாடாளுமன்ற ஒப்புதலுடன் கால கெடுவை மீண்டும் நீட்டிக் கொள்ளலாம். எனினும் அவை இந்த வகையில் தற்காலிகச் சட்டங்களே. ஆனால் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் நிரந்தரச் சட்டங்கள் வேண்டும் எனும் நோக்கத்துடன்தான் இந்திய அரசுகள் UAPA எனும் இந்த நிரந்தரச் சட்டத்தையும் கூடவே இயற்றி வைத்துக் கொண்டன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லாத போதும் முதன் முதலில் நம் கவனம் இச்சட்டத்தின்பால் ஈர்க்கப்பட்டது 2004 இல்தான். அப்போதுதான் UAPA சட்டத்தில் முதல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சர்ச்சைக்குள்ளானது. இந்தத் திருத்தத்தின்படி பயங்கரவாத நடவடிக்கைகள் எனச் சிலவற்றை வரையறுத்து அந்த அடிப்படையில் “அமைப்புகளை” பயங்கரவாத அமைப்புகள் என அறிவித்து அவற்றைத் தடை செய்யும் உரிமையை அரசு எடுத்துக் கொண்டது.
2008 இல் இச்சட்டத்தில் இரண்டாவது திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி குற்றம் சுமத்தப்படாமலேயே குடிமக்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் உரிமையை அரசு எடுத்துக் கொண்டது. அது மட்டுமல்ல. குற்றம் சுமத்தப்பட்டவரைக் காவல்துறை ‘கஸ்ட்டி’ யில் எடுத்து விசாரிக்கும் காலத்தை 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக ஆக்கிக் கொண்டது. அது மட்டுமல்ல இதே நேரத்தில்தான் NIA (National Investigation Agency) எனப்படும், மத்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘பட்டியல் இடப்பட்ட குற்றங்களின் மீது’ விசாரணை நடத்தும் இந்திய அளவிலான ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டது.
மாநில அரசு விசாரித்துக் கொண்டுள்ள எந்த வழக்கையும் தன்னிடம் எடுத்துக் கொண்டு விசாரிக்கும் உரிமையும் அதற்கு அளிக்கப்பட்டது. பீமா கொரேகான் வழக்கில் விசாரணை உரிமையை மகாராஷ்டிர அரசிடமிருந்து இந்த NIA பறித்துக் கொண்டது இப்படித்தான். இது மட்டுமல்ல National Intelligence Grid எனும் ’தேசியப் புலனாய்வு வலைப்பின்னல்’ ஒன்றும் இப்போது உருவாக்கப்பட்டது. விசாரணைக்குத் தேவைப்படும் தகவல்களை அறிந்து NIA, CBI, RAW முதலான புலனாய்வு முகமைகளுக்கு அளிக்கும் நிறுவனமாக இன்று இது உள்ளது.
2012 இல் UAPA சட்டத்தில் செய்த மாற்றங்களின்படி எந்த ஒரு இயக்கத்தையும் காரணம் சொல்லாமல் சட்ட விரோதம் என அறிவித்துக் கைதுகளைச் செய்யலாம். ஆறு மாதங்கள் வரை இப்படிச் சட்ட விரோதமாக அறிவித்ததற்கான காரணங்கள் என எதையும் சொல்ல வேண்டியதில்லை.
அதே போல எந்த ஒரு இடத்தையும் சோதனை செய்தல், குற்றச்செயல் எனக் கூறப்பட்டவைக்குத் தொடர்பில்லாத மூன்றாம் நபர்களின் வாக்குமூலங்களையும் கணக்கில் கொள்ளல் முதலிய அதிகாரங்களையும் அரசு எடுத்துக் கொண்டது.
குடிமக்கள் பல்வேறு வகைகளிலும் கண்காணிக்கப்படுவது மற்றும் கருத்து மாறுபடுபவர்கள் பெரிய அளவில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்படுவது என்பன இப்படித்தான் இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஆக்கம்: மார்க்ஸ்