மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் உள்ள கோசாபாவில் வெள்ளிக்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒரு பாஜக உறுப்பினர் உயிர் இழந்தார், மேலும் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக திடீரென வெடித்ததில் பாஜக தொண்டர்கள் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் தெற்கு 24 பர்கானாவில் உள்ள கேனிங் துணைப்பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த பாஜக தொண்டர்கள் ஷோவன் தேப்நாத், விக்ரம் ஷில், அர்பன் தேப்நாத், ஸ்வபன் குராலி மற்றும் மகாதேவ் நாயக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ஷோவன் தேப்நாத் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
போலீசார் இவ்வாறு கூறி இருப்பினும் “நாங்கள் வெள்ளிக்கிழமை மாலையன்று சாப்பிட்டுக்கொண்டிருந்தோம், குண்டுகள் எங்களை நோக்கி வீசப்பட்டன. யார் அதை வீசினார்கள் என்று தெரியவில்லை” என்று காயம்பட்ட பாஜக தொண்டர் ஒருவர் கூறுகிறார்.
“காயமடைந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் நாங்கள் பேசியதில், அவர்கள் வெடிகுண்டுகளை தயாரித்து கொண்டிருந்த போது தான் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.”
“எனினும் இது குறித்து உள்ளூர் மக்களிடம் விசாரணை நடத்த உள்ளோம்”
என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோசாபா தொகுதியில் ஏப்ரல் 1 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறு உள்ளது.