லூதியானாவின் சவானி மொஹல்லாவில் உள்ள உள்ளூர் பாஜக தலைவருக்கு சொந்தமான கட்டிடத்தில் திங்கள்கிழமை நள்ளிரவில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், 1.29 லட்சம் போதை மாத்திரைகள் (ஓபியாய்டு மருந்துகள்) பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டம், 1985 இன் கீழ் சதீஷ் நகர், ஹேமந்த், அனூப் குமார் மற்றும் ராஜீந்தர் ஆகிய நான்கு நபர்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். நக்கர் ஒரு உள்ளூர் பாஜக தலைவர், முன்னாள் கவுன்சிலர். அவரும் அவரது மனைவி இருவரும் பாஜக சின்னத்தில் போட்டியிட்டு கவுன்சிலர்களாக இருந்துள்ளனர்.
பணியில் உள்ள மாஜிஸ்திரேட் மற்றும் மருந்து ஆய்வாளர் முன்னிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கூடுதல் டி.சி.பி -1 பிரக்யா ஜெயின் கூறுகையில், “இந்த கட்டிடத்தில் பெரிய அளவிலான போதை மருந்துகள் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், முறையே நீதிமன்றத்தில் சர்ச் வாரண்ட் பெற்று கொண்ட பின்னர் நாங்கள் சோதனை நடத்தினோம்.
கட்டிடத்தின் உரிமையாளர் சதீஷ் நக்கர் என்றாலும், அவர் அதை கடந்த பத்து ஆண்டுகளாக உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக ஹேமந்திற்கு வாடகைக்கு கொடுத்திருந்தார். சோதனையின் போது, இங்கு 1.29 லட்சம் போதை மாத்திரைகள் (பார்மா ஓபியாய்டுகள்) கண்டெடுக்கப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் லூதியானாவைச் சேர்ந்த சந்தர் நகரில் வசிக்கும் அனூப் என்பவருக்கு சொந்தமானது என்று ஹேமந்த் தெரிவித்துள்ளார். ஹேமந்த் மற்றும் அனூப்பை நாங்கள் கைது செய்துள்ளோம்.
இதில் நக்கரின் பங்கு குறித்து ஆராயப்பட்டு வருகிறது. போதை மாத்திரைகள் கண்டெடுக்கபட்ட கட்டிடத்தின் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.
ஆரம்பத்தில், பாஜக முன்னாள் கவுன்சிலர் போதைப்பொருள் வலையமைப்பை நடத்தி வருவதாகவும், எஃப்.ஐ.ஆரில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் எனவும் பட்டியலிடப்பட்டிருந்தார், ஆனால் இப்போது காவல்துறையினர் இந்த வழக்கில் யு-டர்ன் எடுத்ததாக தெரிகிறது. ‘ வழக்கில் பாஜக தலைவரின் பங்கு இன்னும் உறுதி செய்யப்படவில்லை’ என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
பாஜக தலைவர் நக்கர் காவலில் இருந்து விடுவிப்பதற்கான காரணம் குறித்து போலீஸ் கமிஷனரிடம் கேட்கப்பட்டபோது, முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாகவும், போதை மருந்துகள் கண்டெடுக்கப்பட்டதில் நக்கருக்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் கமிஷனர் தெரிவித்தார்.