TRP SCAM

டிஆர்பி வழக்கு: முன்னாள் பார்க் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு மும்பை ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது!

டிஆர்பி வழக்கு தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் மார்ச் 2, செவ்வாய்க்கிழமை, ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு ஜாமீன் வழங்கியது.

கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி தாஸ்குப்தா கைது செய்யப்பட்டார். அவருக்கு ரூ .6 லட்சம் பிணைத்தொகையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதமும் ஆறு மாத காலத்திற்கு குற்றப்பிரிவு போலீசார் முன் தாஸ்குப்தா ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்லிக் டிவி யின் முதன்மை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியுடனான வாட்ஸ்அப் உரையாடல்களில் அவரது பெயர் வெளிப்பட்டது.

மும்பை காவல்துறையினர் முன்னதாக போலி டிஆர்பி ஊழல் வழக்கில்கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர், அதில் இருவரின் உரையாடல்கள் இடம்பெற்று இருந்தன, அவை சமூக ஊடகங்களிலும் கசிந்தன. கோஸ்வாமியுடனான உரையாடல்கள் உட்பட, அந்தக் குற்றச்சாட்டுடன் தாஸ்குப்தாவின் தொலைபேசியிலிருந்து சுமார் 500 பக்க வாட்ஸ்அப் உரையாடல் குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.