வடகிழக்கு டில்லியின் வடக்கு கோண்டாவை அடுத்துள்ள சுபாஷ் மொஹல்லாவைச் சேர்ந்த சுமார் 10 பெண்கள் ஒன்றுகூடி கடந்த 08/08/20 அன்று மாலை பஜன்புரா காவல்நிலையம் சென்று இருதினங்களுக்கு முன்பாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பான FIR நகல் வேண்டுமென கோரியுள்ளனர்.
கூட வந்த பிற பெண்கள் வெளியில் காத்திருந்த நிலையில் ஷஹீன் கான், ஷன்னோ, அவருடைய 17 வயது மகள் ஆகிய மூன்று பெண்கள் மட்டும் பஜன்புரா காவல்நிலையத்தின் உள்ளே சென்று FIR நகலைக் கோரியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த போலீஸார் அப்பெண்களை முரட்டுத்தனமாக திரும்பத்திரும்ப அடித்து மிரட்டியதோடு பாலியல் ரீதியாகவும் தாக்குதல் நடத்தியுள்ளனர் என பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்னர்.
எனினும் எதிர்பார்ததது போல காவல் அதிகாரி அசோக் ஷர்மா என்னும் இதை மறுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஷன்னோ கூறுகையில்,
“என்னை அடித்து எனது ஆடையைக் கிழித்தனர். எனது 17 வயது மகளை முடியைப் பிடித்து இருட்டான பகுதிக்கு இழுத்துச் சென்று மார்பகத்தையும், மறைவிடத்தையும் பாலியல் ரீதியாகத் தாக்கினர். புகார் கொடுக்க மீண்டும் இங்கே வந்தால் உங்களை நாங்களே கொன்றுவிடுவோம் என்றும் போலீஸார் மிரட்டினர்”, எனக் கதறி கண்ணீர் விட்டார்.
ஷன்னோவின் கணவர் சலீம் கூறுகையில்,
“ அபகரிக்கப்பட்ட இடத்தில் அயோத்தியில் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்ததை ஒட்டி ஆகஸ்டு 5 ஆம் தேதி நள்ளிரவில் அப்பகுதியில் இருந்த சில இந்துத்துவ வெறியர்கள் எங்கள் பகுதிக்குள் நுழைந்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கூச்சலிட்டதோடு முஸ்லிம்கள் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டுமெனவும் மிரட்டினர்.
அதைப்பற்றி புகார் கொடுத்ததற்காகத்தான் இப்படி எங்களைப் பழி வாங்கியுள்ளனர் போலீஸ் பணியிலுள்ள இந்துத்துவ வெறியர்கள். எங்களுடைய புகாரின் மீது FIR பதிவு செய்ய முடியாது என மறுத்துவிட்டார்கள். இப்போது பீதியில் வாழ்கிறோம்”, என்றார்.
கடந்த பிப்ரவரியில் CIA போராட்டங்களை எதிர்த்து பாஜக நடத்திய டில்லி கலவரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், கொள்ளை, தீவைப்பு சம்பவங்கள் பற்றியும் ஷன்னோ தைரியமாக ஏற்கனவே புகார் கொடுத்து இருந்தார். அதில் கலவரத்தில் ஈடுபட்ட பாசிச பயங்கரவாதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டதோடு, அவர்கள் கொலை, கொள்ளை, தீ வைப்பில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
அதனால் அவரது குடும்பம் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அவரது மகன் மற்றும் பேரன் மீது இந்துத்துவ பயங்கரவாதிகள் வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தினார்கள். கலவர வீடியோ பதிவு செய்யப்பட்ட சலீமின் போனை துப்பாக்கி முனையில் மிரட்டி இரு பயங்கரவாதிகள் பறித்துச் சென்றனர். இப்போது உயிர்பயத்தில் அவர்கள் ஆழ்த்தப்பட்டுள்ளனர்.
டில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் நம்பிக்கைத் துரோகம், பாசிச பயங்கரவாதிகளின் மிருக வெறியாட்டம், அத்தனையையும் வேடிக்கை பார்க்கும் அரசு இயந்திரம் என ஒட்டுமொத்த நாசகார வளையத்திற்குள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு உள்ளனர் டில்லி முஸ்லிம்கள் என விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.