டில்லி AIIMS மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஸ்ரினிவாஸ் ராஜ்குமார் அவர்களுடைய கருத்துக்களின் அடிப்படையில் “மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட தரமற்ற N95 முகக்கவசங்கள், மற்றும் PPE – தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு வழங்கப்படாமை” பற்றியும் நியூஸ்18.காம் இணைய தளத்தில் மே-29 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளைக் களைவதற்குப் பதிலாக, நடந்தவை என்ன தெரியுமா?
முன்னதாக கடந்த ஏப்ரலில், PPE வாங்க ஒதுக்கப்பட்டிருந்த 50 லட்ச ரூபாயை PM CARES-க்கு திருப்பிவிட்டது AIIMS நிர்வாகம்.
- *அச்செய்தி முற்றிலும் உருக்குலைக்கப்பட்டு, AIIMS நிர்வாகத்தின் மறுப்பு மட்டும் வெளியிடப்பட்டது.
- *மருத்துவர் ராஜ்குமார் அவர்கள் AIIMS-ன் உள்ளிருப்பு மருத்துவர் சங்கம் ( Resident Doctors’ Association )-ல் இருந்து நீக்கப்பட்டார்.
- *நியூஸ்18 செய்தியாளர் ரஞ்சன் சர்மா ‘தரமற்ற N95 முகக்கவசத்தைக் காட்டி அம்பலப்படுத்திய’ ட்வீட் அழிக்கப்பட்டது.
மே 29ஆம் தேதியன்று நியூஸ்18-ன் செய்தியில், ” AIIMS பணியாளர்கள் பலர் கொரோனாவினால் இறந்துள்ளனர்; ஏற்கனவே 195 பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இருநாட்களில் மட்டும் புதிதாக 50க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது;
பல சுகாதார ஊழியர்களுக்கு PPE – தனிநபர் பாதுகாப்பு உபகரணம் வழங்கப்படாமல், கையுறையும், சாதாரண முகக்கவசமும் மட்டுமே வழங்கப்பட்டது”, போன்ற விமர்சனங்கள் இருந்தன.
ஆனால், அடுத்த நாள் மே 30ஆம் தேதி இச்செய்தி முற்றிலும் மாற்றப்பட்டது.
“வைரஸைப் பற்றி அல்ல அரசின் பாராமுகத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறோம்; PPE இல்லாமல் AIIMS சுகாதாரப் பணியாளர்கள் வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகும் அபாயம்” என்ற அசல் செய்தித் தலைப்பே ” தரமான PPE மற்றும் முகக்கவசங்களே வழங்கப்பட்டன; தரமற்றவற்றை வழங்கியதான புகாருக்கு AIIMS மறுப்பு” என மாற்றப்பட்டது.
[மே 29 ஆம் தேதி வெளியான நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் தளத்திலும் இந்த உண்மைச் செய்தி வந்தது; அது மாற்றமில்லாமலும் நீடிக்கிறது.]
முன்னதாக நியூஸ் 18-க்கு பேட்டி அளித்த போது, ” AIIMS விடுதியின் பாதுகாப்பு, மோசமான சுகாதாரம், முறையற்ற தனிமைப்படுத்துதல், போதுமான அளவு கொரோனா சோதனை செய்வதன் அவசியம் போன்றவை குறித்து AIIMS மருத்துவர்கள் நிர்வாகத்தோடு போராடியே வருகிறார்கள்; ஆனால் பதிலுக்கு AIIMS நிர்வாகம் மிரட்டலில் ஈடுபடுவதோடு, RDA நிர்வாகிகளின் வேலைக்கே உலை வைக்கவும் முயற்சி செய்கிறது”, என மருத்துவர் ராஜ்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.
அவர் அஞ்சியது போலவே அவரது பேட்டி நியூஸ் 18-ல் வெளியான அன்றே அவரை RDA-விலிருந்து நீக்கிய அறிவிப்பு வெளியானது.
மோடி அரசையோ, AIIMS நிர்வாகத்தையோ விமர்சிக்கும் செய்திகளை மிரட்டி அழிக்க வைப்பது அல்லது திருத்துவது பலமுறை நடந்திருக்கிறது; எனினும் மருத்துவர் ராஜ்குமார் RDA-வில் இருந்து நீக்கப்பட்டதால் இவ்விஷயம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.