உபி : அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சமூகசெயல்பாட்டிற்கான படிப்பில் முதுநிலை இறுதியாண்டு பயிலும் ஃபர்ஹான் ஜூபேரி, அதே துறையில் இளநிலை பயிலும் ரவிஷ் அலிகான் என்ற இரு மாணவர்கள் CAA-வுக்கு எதிராகப் போராடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு,கடந்த 28 ஆம் தேதி வியாழக்கிழமை உ.பி போலீஸால் கைது செய்யப்பட்டனர்.
நள்ளிரவு 12 மணியளவில் கைது செய்யப்பட்ட ரவிஷ் அலிகான் பிறகு விடுவிக்கப்பட்டாலும், பர்ஹான் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஊரடங்கில் கைது வேட்டை:
கொரோனாவுக்காக நான்காம் கட்ட ஊரடங்கை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் பல மாணவர்களுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் எதிராக எதேச்சதிகார அரசு எடுத்து வரும் கைது நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.
மேட்ரக் என்ற பகுதியில் இரு மாணவர்களும் சொந்த வேலையாக காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென மறித்த சாதாரண உடையில் இருந்த போலீஸார் சாலையில் வைக்கப்பட்டிருந்த (Barricade) தடுப்பைத் தூக்கி அந்தக் காரை நோக்கி வீசியதில் காரின் பக்கவாட்டுக் கண்ணாடி உடைந்து ரவிஷ் அலியின் கையைக் காயப்படுத்தியது.
இதன் பின்னர் அவர்களக் காவல்நிலையத்தில் தடுத்து வைத்த போலீஸார் ஆறு மணிநேர அவதிக்குப் பிறகு ரவிஷ் அலியை விடுவித்தனர்.
மளிகை லிஸ்ட் போன்று வழக்குகள் :
ஆனால், CAA-வுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று செயல்பட்டதோடு, AMU-வின் ஒருங்கிணைப்புக் குழுவிலும் அங்கம் வகித்த ஃபர்ஹான் மீது
IPC – 188 : அரசு ஊழியரால் அமுல்படுத்தப்பட்ட சட்ட ஒழுங்குக்குக் கீழ்படியாமை,
147 : கலவரம் செய்தல்,
307 : கொலை முயற்சி,
353 : அரசு ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல்,
504 : வேண்டுமென்றே அமைதியைக் குலைத்தல்,
506 : குற்ற நோக்கோடு மிரட்டுதல்,
336 : பிறருடைய உயிருக்கோ, பாதுகாப்பிற்கோ ஊறு விளைவித்தல்,
124A : தேசதுரோகம்,
153A : மத, இன, பூர்வீக அடிப்படையில் பல்வேறு பிரிவினருக்கிடையே பகை மூட்டுதல்
போன்ற பல்வேறு கடும் பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஏழு பிரிவுகளின் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக அவர் சிறையில் அடைக்கப்பட்டது உண்மைதான் என மேட்ரக் காவல்நிலைய அலுவலரும் உறுதிப்படுத்தி உள்ளார்.
போலீஸ் மிரட்டல்:
“CAA-வுக்கு எதிராகப் போராடியதற்காக நாங்கள் இருவரும் இதற்கு முன்பும் பலமுறை போலீஸால் மிரட்டப்பட்டோம். என்னுடைய தந்தையும் அலிகர் காவல்துறையில் வேலை பார்ப்பதால், ‘இதுவே உனக்கு இறுதி எச்சரிக்கை. தற்போது உன்னை விடுவித்தாலும், உன் நடவடிக்கையைக் கண்காணித்து இனி நீ சிக்கினால் உன் மீதும் நடவடிக்கை எடுப்போம்’, என எச்சரித்து என்னை விடுவித்து விட்டு, தற்போது ஃபர்ஹானை பழிவாங்கிவிட்டனர்”, என ரவிஷ் அலிகான் தெரிவிக்கிறார்.
இந்த கைது நடவடிக்கை பற்றிக் கருத்துத் தெரிவித்த பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் உமர் பீர்ஜாதா ” பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே நடந்த இந்தக் கைது நடவடிக்கை பற்றி நாங்கள் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்”, என்று தெரிவித்தார்.
AMU துணைவேந்தரின் வசிப்பிடத்தின் முன்பு சில மாணவர்கள் சமூக இடைவெளியுடன் கூடி கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரினர்.
நாட்டுமக்களின் கவனம் ஒட்டு மொத்தமாக கொரோனா மற்றும் ஊரடங்கு மீதின் குவிந்து இருப்பதைப் பயன்படுத்தி காவல்துறை CAA-வுக்கு எதிரான செயல்பாட்டாளர்களை ஒடுக்குவதாக கடுமையான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.