Gujarat Islamophobia

‘இது குஜராத். உன்னை சுட்டு கொன்றால் எனக்கு பதவி உயர்வு தான் கிடைக்கும்’ – வழக்கறிஞர் பிலாலை மிரட்டிய போலீஸ்!

குஜராத் மாநிலத்தில் உள்ள கொசம்பா என்ற ஊரில் பள்ளிவாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான FIR நகல் வேண்டும் எனக் கோரியதற்காக அக்காவல் நிலைய ஆய்வாளர் வழக்கறிஞர் பிலாலை லாக்-அப்பில் 8 மணி நேரம் அடைத்து வைத்துள்ளார்.

பள்ளிவாசலில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 16ஆம் தேதி பள்ளிவாசல் நிர்வாகிகள் சிலர் கொசம்பா காவல்நிலையம் சென்று புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் FIR பதிவு செய்யப்பட்டாலும், மறுநாள் வந்து FIR நகல் பெற்றுக் கொள்ளுமாறு அவர்களிடம் கூறப்பட்டது.

மறுநாள் பள்ளிவாசல் நிர்வாகிகள் காவல்நிலையம் சென்று FIR நகல் கோரிய போது, அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர்..

” இது ஒரு சிறிய சம்பவம்; இதற்காக FIR போட வேண்டிய அவசியமில்லை”

எனக் கூறி FIR நகலை அளிக்க மறுத்தார். முந்தைய இரவு பதியப்பட்ட FIR-ஐ அந்த ஆய்வாளர் கிழித்து அப்புறப்படுத்தி இருந்தார்.

FIR மறுக்கப்பட்ட தகவலை பள்ளி நிர்வாகிகள் வழக்கறிஞர் பிலாலுக்குத் தெரிவித்தனர்.

உடனே, வழக்கறிஞர் இது பற்றி காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் விவரித்ததோடு, காவல்துறை மேலதிகாரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் தகவலும் தெரிவித்தார். மேலும், பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமும், அதற்காக FIR பதிய மறுக்கப்பட்ட சம்பவமும் உள்ளூர் ஊடகங்களில் வெளியானது.

ஏப்ரல் 18ஆம் தேதி மாலையில் வழக்கறிஞரை தொலைபேசியில் அழைத்த காவல் கண்காணிப்பாளர், அடுத்த நாள் காவல்நிலையம் சென்று FIR நகலைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அதன்படி மறுநாள் 19 ஆம் தேதி, பள்ளிவாசல் நிர்வாகிகளுடன் வழக்கறிஞர் பிலால் காவல் நிலையம் சென்ற போது, லாக்-டவுனைக் காரணம் காட்டி, மற்றவர்களை வெளியே நிறுத்தி விட்டு வழக்கறிஞரை மட்டும் காவல் நிலையத்தினுள் அனுமதித்தனர்.

'இது குஜராத். உன்னை சுட்டு கொன்றால் எனக்கு பதவி உயர்வு தான் கிடைக்கும்' - வழக்கறிஞர் பிலாலை மிரட்டிய போலீஸ்!
வழக்கறிஞர் பிலால்

வழக்கறிஞர் உள்ளே நுழைந்ததுதான் தாமதம்; அங்கிருந்த ஆய்வாளர் உரத்த குரலில் வழக்கறிஞரை ஏசியதுடன், லாக்-டவுனுக்கே முஸ்லிம்கள் தான் காரணம் எனவும் மத துவேஷத்துடன் கூப்பாடு போட்டிருக்கிறார்.

மேலும், ” நீ கடும் விளைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இது குஜராத்; உன்னை சுட்டுக் கொன்றால் எனக்கு பதவி உயர்வுதான் கிடைக்கும். இங்குள்ள அரசு எங்களோடு இருக்கிறது. நினைவில் வைத்துக் கொள்.“, என்று மிரட்டியிருக்கிறார்.

பாய்ந்து வந்த காவலர்கள் வழக்கறிஞரை எட்டி உதைத்து, இழுத்துச் சென்று லாக்-அப்பில் அடைத்துள்ளனர்.

https://twitter.com/dhatukala/status/1252567770337669120

ஒழு செய்து, தொழுகக் கூட தன்னை அனுமதிக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

அவரிடமிருந்த போனை பறிமுதல் செய்ததோடு, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் மீது பொய் வழக்கும் புனைந்தது காவல்துறை.

தனது கணவர் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதை அறிந்த வழக்கறிஞரின் மனைவி, இது பற்றி ஒரு காணொலி பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளார். இதனால் மேலதிகாரிகளுக்கு ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக 8 மணி நேர அவஸ்தைக்குப் பிறகு அன்று மாலை வழக்கறிஞர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதன் பிறகு தான் பள்ளிக்கு தீ வைத்த நபர் மீது இ.த.ச 436, 504, 506 ஆகிய பிரிவுகளில் வழக்கும் பதியப்பட்டது.

ஆனாலும், குற்றத்தில் ஈடுபட்ட நபர் ஆளும் பா.ஜ.க-வில் செல்வாக்குள்ள நபராக இருப்பதால் கைது செய்யவில்லை.

காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஊக்கமடைந்த அந்நபர் பதட்டத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு சில தினங்களுக்குப் பிறகு ஒரு குழந்தையின் நாப்கின்னை பள்ளிக்குள் எறிந்துள்ளார். தீவைப்பு சம்பவத்திற்குப் பிறகு பள்ளியில் வைக்கப்பட்ட CCTV கேமிராவில் இது பதிவாகியிருந்தது.

மனித உரிமைப் போராளியான வழக்கறிஞர் பிலால் காக்ஜி மீது பொய் வழக்குகள் போடப்படுவது இது முதல் முறை அல்ல.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் இரண்டு தரப்பினர்கிடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பந்தமாக இவர் பெயர் FIR-ல் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டது. அதேபோல் 2012-ல் சாலையை சேதப்படுத்தி, தடுப்பு ஏற்படுத்திய ஒருவர் மீது புகாரளிக்க புகார் அளிப்பவரோடு இவரும் வந்தபோது இதே காவல் நிலையத்தில் இருவரும் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டனர்.

சூரத்தின் சுற்றுவட்டாரத்தில் காவல்துறையின் அத்துமீறலை, குறிப்பாக கிறுபான்மையினரும், தலித்களும் நசுக்கப்படுவதை எதிர்த்து மனித உரிமைப் போராட்டத்தை நான் நடத்துவதால் எனது குரலை ஒடுக்க முயற்சிக்கிறார்கள்“, என்கிறார் வழக்கறிஞர் பிலால் காக்ஜி.