விசாகபட்டிணம்: இரண்டு மாதங்களுக்கு முன்பாக அரசால் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மயக்கவியல் துறை மருத்துவர் சுதாகரை சங்கிலியால் கட்டி, முரட்டுத்தனமாக ரோட்டில் இழுத்துச் சென்றனர் விசாகபட்டிணம் போலீஸார்.
“மருத்துவர்களுக்கு ‘N95 முகக்கவசங்கள்: போதுமான அளவு வழங்கப்படவில்லை; ஒரு முகக்கவசத்தை 15 நாட்களுக்குப் பயன்படுத்த வேண்டியுள்ளது”, என கடந்த மார்ச் மாதம் பகிரங்கப்படுத்தியதற்காகவே அம்மருத்துவர் இவ்வாறு பழிவாங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், “சிறிது காலமாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் சுதாகர் நெடுஞ்சாலையில் நின்று பிரச்சினை செய்ததோடு, தடுக்கச் சென்ற காவலர்களிடம் கடுமையாக நடந்து கொண்டு, ஒரு காவலரின் போனைப் பறித்து எறிந்து தகராறு செய்ததாகவும் , அதனாலேயே நெடுஞ்சாலைப் போக்குவரத்திற்கு இடைஞ்சலைத் தவிர்க்கும் விதமாக போதையில் இருந்த மருத்துவரை காவல் நிலையம் கொண்டு சென்றதாகவும்” போலீஸ் கமிஷனர் மீனா தெரிவித்துள்ளார்.
மேலும், “ஆல்கஹால் கண்டறியும் சோதனைக்காக மருத்துவர் சுதாகர், கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதேபோல் மருத்துவரைத் தாக்கிய கான்ஸ்டபில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்”, கமிஷனர் தெரிவித்துள்ளார்.