கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் டிஎஸ்பி தாவிந்தர் சிங் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததற்காக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), வியாழக்கிழமை ஷோபியனில் உள்ள மால்தாரா கிராமத்தை சேர்ந்த பாஜக தலைவர் தாரிக் அகமது மிர் கடந்த 2 மாதங்களாக போலீஸ் கடுங்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் வாஞ்சி தொகுதியின்பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றிகரமான தோல்வியை அடைந்தவர் தாரிக் அகமது மிர்.
ஹிஸ்ப் பயங்கரவாதிகளுக்கு தளவாட ஆதரவை வழங்குவதில் மிர் ஈடுபட்டிருந்தார் என்றும் கடந்த ஜனவரி 11 அன்று மூன்று ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பிடிபட்ட முன்னாள் டி.எஸ்.பி தாவிந்தர் சிங்குடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் என்கிறது உளவுத்துறை வட்டாரங்கள்.
தாரிக் அகமது மிர் ஒரு ஹிஸ்ப் பயங்கரவாதி, அவர் 2008 ல் சரணடைந்தார். அதன் பிறகு தேசியவாதம் பேசும் பாஜக அவரை கட்சியில் இணைத்து கொண்டு, தனது கட்சி வேட்பாளராகவும் அறிவித்தது.
கைது செய்யப்பட்ட டிஎஸ்பி சிங் மற்றும் மூன்று ஹிஸ்ப் பயங்கரவாதிகள் அவர்களுக்குள் தொடர்பு கொள்வதற்கு ஒரு முக்கிய தரகராக பாஜக வின் தாரிக் அகமத் மிர் இருந்ததாக குற்றவாளிகள் தெரிவித்ததன் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.
கடந்த பிப்ரவரியில் என்ஐஏ குழு அகமதின் ஷோபியன் வீட்டில் சோதனை நடத்தியது, ஆனால் அவர் தப்பித்து விட்டார். இருப்பினும், ஒரு சில தினங்களுக்குப் பிறகு, அவரது பாரமுல்லா வீட்டில் அகமதை பிடித்து என்ஐஏ கடுங்காவலில் வைத்தது.
“தாரிக் மிர் வியாழக்கிழமை ஜம்முவில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து அவரை ஆறு நாட்கள் போலீஸ் ரிமாண்டில் எடுத்துள்ளோம்” என்று என்ஐஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.தாரிக் அவருக்குள்ள தொடர்புகள் மூலம் பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வாங்குவதும், அதை பயங்கரவாதிகளிடம் ஒப்படைப்பதும் வழக்கம் என போலீசார் தெரிவித்தனர்.
“இந்த செய்தி ஊடகங்களில் வெளியாகவே, தாரிக் அகமத் மீரை நாங்கள் 2018 ஆம் ஆண்டிலேயே கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். ஆனால் அவர் எப்படி 2014 இல் பாஜக வேட்பாளராக களம் இறக்கப்பட்டார் என்று எங்களுக்கு தெரியாது” என்கிறார் காஷ்மீர் யூனியன் பிரதேசசத்தின் பாஜக தலைவர் அல்தாப்.