“லாக் டவுன்” ஐ எதிர்த்து முதலாளிகள் வெளிப்படையாக மோடி அரசைக் கண்டிக்கத் தொடங்கிவிட்டனர். பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜிவ் பஜாஜ் இப்படியான லாக்டவுன் ஒரு தீர்வாகாது என்கிறார். மோடி அரசு பணமதிப்பு நீக்கம் செய்தபோது இது பயனற்ற ஒன்று என வாயைத் திறந்து கண்டித்த தொழிலதிபர் அவர்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த 50 ஆண்டுகளில் காணாத பெரும் பொருளாதார வீழ்ச்சியை இந்தியா சந்தித்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார். இது ஒரு முதலாளியின் தொழில் வீழ்ச்சி குறித்த கவலை மட்டும்தானா என்கிற கேள்வி நமக்கு ஒரு பக்கம் எழுந்தாலும் இப்படியான விமர்சனங்கள் தொடங்கி விட்டன என்பது கவனத்திற்குரியது, ஏற்கனவே அரசு தனது கொரோனா விரைவுச் சோதனைகளை (அது பயனில்லை என்பதால்) நிறுத்தி வைத்துள்ளதும் கவனத்துக்குரியது.
இன்றைய நெருக்கடி உருவானது கோவிட் 19 வைரசால் இருக்கலாம். ஆனால் அதனைப் பரப்பியது அரசுதான் எனவும் இவர் அதிரடியாகச் சொல்லியுள்ளார். இந்த லாக்டவுனை அவர், “பிரச்சினையைத் தேடுகிற தீர்வு” எனவும் சாடியுள்ளார். ஏற்கனவே இன்று அரசு கொரோனாவுக்கான “விரைவுச் சோதனையை” பயனற்றது எனத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டும் வீடுகளில் ஓய்வெடுக்கச் செய்துவிட்டு மற்றவர்களை வேலைக்குத் திரும்ப வைக்க வேண்டும் என்பது இந்த முதலாளியின் கருத்தாக முன்வைக்கப்படுகிறது.