உபி : டெல்லி நிஜாமுதீன் மர்கஸில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் எவருக்கேனும் கொரோனா நோய்த்தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டாலோ அல்லது சந்தேகிக்கப்பட்டாலும் கூட அவர்களை தற்காலிக சிறைகளில் அடைத்து வைக்குமாறு உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் அஜய் பிஷ்த் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
டெல்லியில் நிஜாமுதீன் மர்க்கஸில் பங்கெடுத்த பின்னர் உத்தரபிரதேசத்திற்கு வந்த 3,000 தப்லீகி ஜமாஅத் உறுப்பினர்களை மாநில காவல்துறை அடையாளம் கண்டுள்ளது என தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.
“லாக்டவுன் காலத்திலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களை தற்காலிக சிறையில் வைக்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார், வழக்கமான சிறைகளில் அல்ல. இதற்காக மாநிலத்தில் இதுவரை 23 தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் கைதிகளுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.”
என்று கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அவனிஷ் அவஸ்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மிகவும் குறைவாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் மாநிலங்களில் உபி யும் ஒன்று. அங்கு இதுவரை 1,184 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வந்த 325 தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களையும் உபி போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் அவர்கள் மீது 45 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, அவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர்.
பேராசிரியரை கைது செய்த உபி போலீஸ்:
அலகாபாத்தில், பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் 29 பேர் கைது செய்யப்பட்டதாக பி.டி.ஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதில் 16 வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களும் அடங்குவர். பேராசிரியர் முகமது ஷாஹித், இந்தோனேசியர்களை நகரில் உள்ள ஒரு மசூதியில் அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். கோட்வா பானியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்தோனேசியர்களில் ஒருவர் கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்றார் என்று அலகாபாத் காவல் கண்காணிப்பாளர் பிரிஜேஷ் குமார் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
புனித ரம்ஜான் மாதத்தில் அத்தியாவசிய பொருட்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் இது குறித்து கோட்ட ஆணையர்கள், மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள் மற்றும் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும், லக்னோ மற்றும் கவுதம் புத்த நகர் காவல் ஆணையர்களுக்கும் அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் அவஸ்தி மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும் யோகி ஆதித்யநாத் முஸ்லிம்கள் மீது வைத்துள்ள அளவுகடந்த பாசம் நாட்டிற்கே தெரிந்ததே, எனவே இந்த அறிவிப்பு காகிதத்தில் மட்டுமே இருக்குமே தவிர செயல்வடிவம் எடுக்கப் போவதில்லை என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நோய் என்பது எவரும் வேண்டுமென பெற்று வருவது அல்ல. நோய் யாருக்கும் ஏற்படலாம். இதைக்கூட அறியாமல் கொரோனா நோய் வந்து விட்டால் அது ஏதோ குற்றச்செயலில் ஈடுபட்டவரை போல அவர்களை பிடித்து சிறையில் அடைப்பது மனிதநேயத்திற்கு எதிரானது. உலகில் எந்த நாடும் இப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்யாது எனவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.