நாடு முழுக்க கரோனா வைரஸ் பரவி வரும் நிலையிலும் உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக அரசாங்கம், இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோயில்களை திறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் 29 ஆம் தேதி கேதர்நாத் கோவிலையும், ஏப்ரல் 30ஆம் தேதி பத்ரிநாத் கோவிலையும் திறக்க அம்மாநில பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
கேதர்நாத் கோவிலின் தலைமை பூசாரி மகாராஷ்டிர மாநிலத்திலும் , பத்ரிநாத் கோவில் தலைமை பூசாரி கேரள மாநிலத்திலும் உள்ளதால் ஒருவேளை தலைமை பூசாரிகளால் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் வேறு பூசாரிகளை நியமிக்குமாறு கோவில் நிர்வாகிகளிடம் மாநில அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
காரில் வர உள்துறை அமைச்சகம் அனுமதி:
தலைமைப் பூசாரிகள் வேற்று மாநிலங்களில் உள்ளதால் இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் மாநில அரசு பேசி உள்ளதாகவும், உள்துறை அமைச்சகம் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று, அவர்கள் காரிலேயே தங்கள் தங்கள் மாநிலத்தில் இருந்து வந்து சேர அனுமதி வழங்கி உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. அவர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தை அடைந்தாலும் கூட 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள் என மாநில அரசின் செய்தித் தொடர்பாளரும் கேபினட் அமைச்சருமான மதன் கவுஷிக் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டவாறு கோவில் திறப்பு:
எனினும் பூசாரிகள் நாளைக்கே அம்மாநிலத்தை அடைந்தாலும் கூட அவர்களால் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது, ஏனெனில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படுவார்கள். எனவே பத்ரிநாத் கோவில் திறப்பு நாளை தெஹ்றி அரச குடும்பம் அதற்கேற்ப மாற்றி அமைக்க அதிகாரம் கொண்டுள்ளனர் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் பத்ரினாத் மற்றும் கேதார்நாத் கோவில் கமிட்டியினர் வேறு பூசாரிகளை தயார் நிலையில் வைக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
அசாதாரணமான சூழ்நிலையில் கோவில் திறப்பு நிகழ்வு என்பது முதல் முறை நடப்பதல்ல, இவ்வாறு முன்னரே மூன்று நான்கு முறை நடந்துள்ளது என உத்தரகாண்ட் அரசு தலைமை செயலாளர் உத்பால் குமார் தெரிவித்துள்ளார்
உத்தரகாண்ட் மாநிலத்தில் கரோனா:
பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை 40 பேருக்கு மட்டுமே கரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் நோயாளிகள் அதிகம் இல்லை என்று அர்த்தம் கிடையாது. ஏனெனில் வியாழக்கிழமை மாலையின் நிலவரபடி வெறும் 2593 நபர்களுக்கு மட்டுமே கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது மாநில அரசு. எனினும் அம்மாநிலத்தின் மக்கள் தொகையோ 1.01 கோடி.
எனவே பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் தான் உண்மை நிலவரம் தெரியவரும், நாட்டில் கரோனா நோய்த்தொற்று மிகவும் வேகமாக பரவி வரும் சூழலில் இவ்வாறு கோவில் திறப்பதற்கு அனுமதி அளிப்பது அம்மாநில மக்களுக்கு பாதகமாக அமையலாம் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.