மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டியில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளையின் இறுதிச்சடங்கில் 3000 பேர் பங்கேற்றதால் அப்பகுதியில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.
முடுவார்பட்டியிலுள்ள செல்லாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை உயிரிழந்துள்ளதால் அக்காளைக்கு கிராம மக்கள் சார்பில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது. அப்போது, காளையின் உடலை ஏற்றிச்செல்ல வண்டிக்கு ஏற்பாடு செய்து, காளையை சுற்றி மலர் மாலைகளும், ரொக்கப் பணமும் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
இந்தக் காளை பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வெற்றிபெற்று பரிசுகள், ரொக்கம் உள்ளிட்டவற்றை வென்றுள்ளது. ஆகவே, காளையின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 3000 பேர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மாடுபிடி வீரர்கள் என தெரியவந்துள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த காளையின் உடல், பட்டாசுகள் வெடித்து, விசில் சத்ததுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், மதுரை மாவட்டம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது 3000 பேர் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சரீர விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்காததால் கொரோனா அபாயமும் அதிகரித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை.
நன்றி: சமயம் தமிழ்