Islamophobia Uttar Pradesh

உபி: ‘முஸ்லிம் என்பதால் ஏசிபேசி, காய்கறிகளை விற்க அனுமதிப்பதில்லை’; தொடரும் அவலம் !

முஸ்லிம் என்ற காரணத்தால் நிந்தனை செய்யப்பட்டதாகவும் காய்கறிகளை விற்க தடை செய்யப்பட்டதாகவும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மகொபா மாவட்டத்தைச் சேர்ந்த 5 காய்கறி வியாபாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்து வடிவிலான புகார் அளித்துள்ளனர்.

அவர்களில் ஒரு வியாபாரி கூறுகையில் “நீங்கள் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் . நீங்கள் குரோனோ வைரஸை பரப்ப வந்துள்ளீர்கள்” என கூறியதாக தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி கிராமங்களுக்குச் சென்று காய்கறிகளை விற்பனை செய்ததாகவும், அப்போது மக்கள் முண்டியடித்துக்கொண்டு காய்கறிகளை வாங்கியதாகவும், திடீரென அங்கு குழுமிய ஒரு கும்பல் இவர்கள் முஸ்லிம்கள் இவர்களிடமிருந்து எந்த விதமான காய்கறிகளையும் வாங்க வேண்டாம் என கூறி , எங்களையும் நிந்தனை செய்து கிராமத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்ததாகவும் எழுத்து வடிவிலான புகாரில் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் காய்கறிகளை விற்க சென்றோம். 15 நிமிடத்திற்குள் 100க்கும் மேற்பட்டோர் எங்களிடமிருந்து காய்கறிகளை வாங்குவதற்காக திரண்டனர். பிறகு சிறிது நேரம் கழித்து ஒரு கூட்டத்தினர் வந்தனர். . ‘இவர்கள் முஸ்லிம்கள். இவர்களிடமிருந்து எதையும் வாங்க வேண்டாம்’ என கூறினார் என்கிறார் வியாபாரிகளில் ஒருவரான முகமது சமீம்.

நாங்கள் விற்பனை செய்த காய்கறிகளும் எங்களிடம் திரும்ப அளிக்கப்பட்டது . நாங்கள் முஸ்லிம்கள் என்றும் எங்கள் வாகனங்களில் பிறை சின்னம் உள்ளதாகவும் அங்கு வந்த ஒரு கும்பல் கூறினர். கடந்த இரண்டு நாட்களாக நாங்கள் வீட்டை விட்டு வெளியேறவில்லை.

உபி அரசால் அங்கு பணியமர்த்தப்பட்ட மூத்த நிர்வாகி ராம் சுரேஷ் வர்மா இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்களித்தார்.

“அவர்கள்(முஸ்லிம் வியாபாரிகள்) தங்கள் ஆதங்கத்தை எங்களிடம் தெரிவித்துள்ளனர். சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் மூலம் இது குறித்து விசாரணை நடத்தப்படும். இனி இவ்வாறான பிரச்சினைகள் இருக்காது. எது செய்ய வேண்டுமோ அதை முறைப்படி செய்வோம். மாவட்ட நிர்வாகம் இவ்வாறான பிரச்சினைகளை இனி சந்திக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்” என ராம் சுரேஷ் வர்மா என்.டி.டிவி யிடம் கூறினார்.