வரதராஜன், வயது 45 நாமக்கல் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர். குறிப்பிட்ட மதத்தினரே கொரோனா வைரஸ் பரப்புவதாக அண்மையில் அவர் அவதூறான கருத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனையடுத்து களத்தில் இறங்கிய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 45 பேருக்குக் கொரோனா நோய் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வரதராஜன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ”நாமக்கல் சந்தைப்பேட்டைப் புதூர்ப் பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த 4 பேர் டெல்லி மாநாட்டிற்குச் சென்றார்கள். அவர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 2 பேர் வீட்டில் இறந்து விட்டார்கள்” என்று பதிவு செய்திருந்தார். எனினும் இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.
ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் கொரோனா சம்பந்தமாக பொய்யான, அவதூறான செய்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி இருந்தது. அதற்கேற்ப மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு உத்தரவின் பேரில் வரதராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.