Corona Virus

PM-CARES நிதிக்கு கட்டாய தொகை வழங்க எய்ம்ஸ் மருத்துவர்கள் சங்கம் எதிர்ப்பு; நிதியை கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை வாங்க கோரிக்கை ..

பி.எம்-கேர்ஸ் நிதிக்கு தங்கள் ஒருநாள் சம்பளத்தை கட்டாய நன்கொடையாக வசூலிப்பது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய மருத்துவமனை நிர்வாகத்திடம் 2,500 மருத்துவர்களை உள்ளடக்கிய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) மருத்துவர்கள் சங்கம் (ஆர்.டி.ஏ-குடியிருப்பாளர் மருத்துவர் சங்கம்) கோரிக்கை விடுத்துள்ளது.

ஒன்று நன்கொடையை விருப்பம் உள்ளவர்கள் வழங்கலாம் என அறிவியுங்கள் அல்லது இந்த திட்டத்தை முழுவதும் கைவிடுங்கள். அதற்கு மாற்றமாக இந்த வசூலை மருத்துவர்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களான கியர்ஸ் மற்றும் பிபிஇக்களை வாங்குவதற்கு பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நம் நாட்டைக் காப்பாற்ற நாங்கள் முன்னணியில் பணியாற்றி வருகிறோம். எங்களில் பெரும்பாலோர் தனிப்பட்ட அளவில் பி.எம்-கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளித்துள்ளோம், எனினும் இது விருப்பமுள்ளவர்கள் மட்டுமே வழங்கும்படி இருக்க வேண்டும் என விரும்புகிறோம். எங்கள் கடைசி மூச்சு வரை நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், ஆனால் மக்களின் உரிமைகளை, குறிப்பாக சுகாதாரப் பணியாளர்களைக் கட்டுப்படுத்த அவசரநிலையை ஒரு காரணமாக ஆக்க கூடாது

என்று எய்ம்ஸ் ஆர்.டி.ஏவின் பொதுச் செயலாளர் சீனிவாஸ் ராஜ்குமார் டி, இந்தியா டுடே டிவியிடம் கூறியுள்ளார்.

“சி.எஸ்.ஆர் நிதிகளும் பி.எம்-கேர்ஸ் நிதிக்கு செல்கின்றன. நாட்டு மக்களில் பெரும்பாலானோரும் பி.எம்-கேர்ஸுக்கு நன்கொடை அளிக்கின்றனர். எனினும், பி.எம்-கேர்ஸ் நிதிக்கு வழங்கப்படுவதை விட நாடு முழுவதும் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு சிறந்த பிபிஇ மற்றும் பாதுகாப்பு கியர்கள் அதிக அளவில் வாங்குவதற்கு எங்களிடம் வசூலிக்கப்படும் நன்கொடை நேரடியாக பயன்படுத்தப்பட்டால் நல்லது” என சீனிவாஸ் மேலும் கூறினார்.