அடுத்த 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அந்த சமயத்தில் செய்யக்கூடியவை மற்றும் கூடாதவை எவை என்பதையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
செயல்படுபவை :
கடைகள்: உணவு, மளிகை சாமான்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் மற்றும் பால் சாவடிகள், இறைச்சி மற்றும் மீன், விலங்கு தீவனம் ஆகியவற்றைக் கையாளும் கடைகள். (வீடுகளுக்கு வெளியே தனிநபர்களின் நடமாட்டத்தைக் குறைக்க மாவட்ட அதிகாரிகள் வீட்டு விநியோகத்தை ஊக்குவிக்கலாம்/ எளிதாக்கலாம்)
நிதி சேவைகள்: வங்கிகள், காப்பீட்டு அலுவலகங்கள் மற்றும் ஏடிஎம்கள்.
ஊடகம்: அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள்
தகவல்தொடர்புகள்: தொலைத்தொடர்பு, இணைய சேவைகள், ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகள். ஐடி மற்றும் ஐடி-இயக்கப்பட்ட சேவைகள் ஆகியவற்றில் அத்தியாவசிய சேவைகள் மட்டும் இயங்க அனுமதி
உணவு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் இ-காமர்ஸ் மூலம் வழங்குதல்
பெட்ரோல் பங்குகள், எல்பிஜி மற்றும் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு சில்லறை மற்றும் சேமிப்பு நிலையங்கள்
மின் உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக அலகுகள் மற்றும் சேவைகள்
குளிர் சேமிப்பு மற்றும் கிடங்கு சேவைகள்
தனியார் பாதுகாப்பு சேவைகள்.
செயல்படாதவை:
மத வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடும் எந்த நிகழ்விற்கும் அனுமதி இல்லை. பொதுமக்கள் மத வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை.
ரயில், பஸ், விமான சேவைகள் இயங்காது.
கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் இயங்க அனுமதி இல்லை.
இறுதிச்சடங்கில் 20 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி.
சட்டவிதிமுறைகளை மீறுபவர்கள் பேரழிவு மேலாண்மை சட்டம் 2005ன் 51-60 வரை உள்ள பிரிவுகள் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 188ன் கீழ் தண்டிக்கப்படுவார்கள்.
மேலும் 15,000 கோடி ரூ. தொகையை கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் என மோடி அறிவித்துள்ளார். எனினும் நாட்டில் தினக்கூலி வேலையில் ஈடுபடுபவர்களுக்கு எந்த ஒரு வழிவகையும் அரசு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக திருமாவளவன் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள், “கையெடுத்துக் கும்பிடுகிறேன்; ஒவ்வொருவரும் அவரவர் வீட்டிலேயே இருங்கள்; வீட்டை விட்டு வெளியே வந்தால் உங்கள் வீட்டுக்குள் கொரோனா அடியெடுத்து வைக்கும்” என்று மிகுந்த உருக்கத்தோடு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதனை நாம் ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும்.
நம்மை நாம் தற்காத்துக் கொள்வதற்கும் நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கும் இதை விட்டால் வேறு வழியில்லை என்பது தான் இந்த 21நாள் ஊரடங்கு உத்தரவுக்கு அடிப்படையான காரணம்.
ஏராளமான பொருளாதார சிக்கல்களை, வேறுபல நெருக்கடிகளை சந்திக்க நேரலாம். ஆனால், வேறு வழியில்லை் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வேண்டுகோளுக்கு முழு ஒத்துழைப்பை நல்குவோம்! நாட்டு நலன்களுக்காக; நமது நலன்களுக்காக; நம்முடைய குடும்பத்தினரின் நலன்களுக்காக! எனவே, இந்த வேண்டுகோளை அனைவருக்கும் நான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சயின் சார்பாக விடுக்கிறேன் என தொல். திருமாவளவன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.