Indian Economy

பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி லிட்டருக்கு தலா ரூ.18 மற்றும் ரூ.12 வரை உயர்த்தியது மோடி அரசு..

மக்களவையில் இன்று, நாட்டில் கொரோனா பரவிவருவதை காரணம் காட்டி நிதி மசோதா 2020 க்கான திருத்தங்கள் விவாதங்கள் ஏதும் நடைபெறாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால் இந்த மசோதா அவசரகதியாக நிறைவேற்றப் பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி கோவிட் -19 நோயை எதிர்கொள்ள எந்தவிதமான நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எந்த வித நிதி திட்டங்களையும் நிதி அமைச்சர் நிர்மலா அறிவிக்கவில்லை.

இன்று நிதி மசோதாவில் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியின் தொகையை லிட்டருக்கு ரூ .18 மற்றும் ரூ .12 வரை உயர்த்தியுள்ளது மோடி அரசு. இதன் மூலம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு ஏற்பட்டாலும் இந்திய மக்கள் அதன் பயனை அடைய முடியாமல் போகும். பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு 12 மற்றும் 18 ரூ வரை மோடி அரசு உயர்த்தி உள்ளதே இதற்கு காரணம்

முன்னர் இருந்த வரி நிலவரத்தின்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ .10 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ .4 ஆக இருந்தது.

மார்ச் 14 ம் தேதி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு தலா 3 ரூபாய் உயர்த்தியது மோடி அரசு. மேலும் சாலை மற்றும் உள்கட்டமைப்பு செஸ் (ஆர்ஐசி) கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிற்கும் கூடுதலாக லிட்டருக்கு 1 ரூபாய் விதிக்கப்பட்டது.

இந்த மார்ச் 14 கலால் வரி உயர்வு, அரசாங்கத்திற்கு ரூ .2,000 கோடிக்கு மேல் வருவாயை ஈட்ட உதவியதாக செய்தி வெளியானது.

பொதுவாக கலால் வரி அதிகரிப்பு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும். ஆனால், தற்போது சர்வதேச எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது, (அதனால் பெட்ரோல் டீசல் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றம் வராது) எனினும் அதற்கேற்ப விலையை குறைத்து நாட்டு மக்களுக்கு பயனை தராது மத்திய அரசே வருவாயை அதிகரித்து கொண்டு வருவதற்கு அரசியல் விமர்சகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் நாடாளுமன்றத்தின் அடுத்த அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.