என்.ஆர்.சி என்கிற தேசிய குடிமக்களின் பதிவு என்பது எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கும் ஒரு “அவசியமான பயிற்சி தான்” என்றும் இந்திய சட்ட விதிமுறைகளின்படி அதை நிறைவேற்றபட வேண்டும் என்றும் மோடி அரசு செவ்வாய்க்கிழமையன்று அறிவித்துள்ளது. இந்திய அரசியலமைப்புக்கு எதிராக உள்ள மத அடிப்படையிலான குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளுக்கு பதில் அளிக்கும் முகமாக மோடி அரசாங்கம் உச்சநீதிமன்றத்திற்கு பிரமாணப் பத்திரத்தின் மூலம் பதில் அளித்துள்ளது.
மோடி அரசின் முரண்பாடுகள்:
முன்னதாக “நாடு முழுவதும் NRC கொண்டு வரும் திட்டமே அரசிடம் இருந்ததில்லை,ஆகவே யாரும் பயப்படத் தேவையில்லை’ என்று பிரதமர் பேசி இருக்கிறார். கடந்த டிசம்பர் மாதத்தில் தில்லியில் ஆற்றிய உரையில் அவர் அவ்வாறு கூறி இருந்தார். எனினும் நாங்கள் என்.ஆர்.சி யை நிச்சயம் கொண்டு வருவோம், சட்டவிரோத குடியேறிகளை கப்பலில் ஏற்றி வங்காள விரிகுடாவில் தூக்கி எறிவோம் என்ற அமித் ஷாவின் பேச்சு வீடியோக்களாக பரவி வரும் நிலையில் பிரதமர் மோடி அதற்கு முரணாக கருத்து கூறினார்.
அதுமட்டுமின்றி கடந்த 2019 தேர்தல் வாக்குறுதி பாத்திரத்தில் நாடு முழுவதும் என்.ஆர்.சி கொண்டு வருவோம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதே ஆண்டு இந்திய ஜனாதிபதியும் தனது உரையில் இதை குறிப்பிட்டுள்ளார். இருந்தும் கூட மோடி அப்பட்டமான பொய் பேசியதால் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளானார்.
மோடி அரசின் செயல்பாடு:
நாட்டில் நிதிப்பற்றாக்குறை தாண்டவமாட கடந்த டிசம்பர் மாதத்தில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்.பி.ஆர்) உருவாக்க ரூ .3,900 கோடி பட்ஜெட்டுக்கு மோடி அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. என்.பி.ஆர் என்பது வீடு வீடாக சென்று மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பாகும், மேலும் இது என்.ஆர்.சியின் முதல் படியாகும் என என்.பி.ஆர் லேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை ஏப்ரல் மாதத்தில் தொடங்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
நீதிமன்றத்தில் அந்தர் பல்டி:
நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கண்டறிய ஏற்கனவே இந்திய சட்டத்தில் இடம் இருந்தும் கூட, சட்டவிரோத குடியேறிகளை கண்டறிய நாடு முழுவதும் என்.ஆர்.சி அமல்படுத்த வேண்டும் என மோடி அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. “என்.ஆர்.சி என்கிற தேசிய குடிமக்களின் பதிவு என்பது எந்தவொரு இறையாண்மை கொண்ட நாட்டிற்கும் ஒரு “தேவையான பயிற்சி தான்” அதன் மூலம் நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் யார், நாட்டின் குடிமக்களாக இல்லாதவர்கள் யார் என அடையாளம் காண முடியும்” என மோடி அரசு தெரிவித்துள்ளது.
“வெளிநாட்டினர் சட்டம், பாஸ்போர்ட் (இந்தியாவுக்குள் நுழைதல்) சட்டம், சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண / கண்டறிய உள்ள 1920 மற்றும் 1955 சட்டம் ஆகியவற்றை ஒருமித்து வாசித்தால் நாடு தழுவிய என்.ஆர்.சி யை நடத்துவது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை உணரலாம். எனவே உரிய சட்டவிதிகளை பின்பற்றி இதை செய்வோம்” என மோடி அரசு மேலும் கூறியுள்ளது.
மக்களின் போராட்டங்களை மதிக்காத அரசு:
இந்தப் பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததன் மூலம் நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களை சிறிதும் பொருட்படுத்தாமல் மக்களின் உணர்ச்சிகளுக்கு எதிராக செயல்படும் மக்கள் விரோத அரசு மோடி அரசு என்பதை உறுதிப் படுத்துவதாக உள்ளது. மேலும் மோடி அமித்ஷா ஆகியோரின் பொய்களும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்றும் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.