குஜராத் : 2002 ஆம் ஆண்டு பாசிஸ்டுகளால் அரங்கேற்றப்பட்ட நரோடா காம் கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி வழக்கை விசாரித்து வந்த சிறப்பு எஸ்ஐடி நீதிபதி, குஜராத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அதிரடியாக வல்சாட்டின் முதன்மை மாவட்ட நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.
வழக்கு பின்னணி:
குஜராத் நரோடா காம் படுகொலை என்பது உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்த ஒன்பது பெரிய கலவர வழக்குகளில் ஒன்றாகும். கோத்ரா ரயில் படுகொலையை கண்டித்து இந்துத்துவ பரிவாரங்கள் நடத்திய போராட்டங்களின் போது அகமதாபாத்தில் உள்ள நரோடா காம் பகுதியில் இந்துத்துவாவினர் அரங்கேற்றிய கலவரத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான கோட்னானி, முன்னாள் முதல்வர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தில் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக இருந்தவர்.
அதிரடி மாற்றம் :
குஜராத் உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி, நகர சிவில் நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி (அகமதாபாத்) எம்.கே. டேவ் வல்சாத் மாவட்ட முதன்மை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக எஸ்.கே. பாவ்நகர் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய எஸ்.கே பக்ஸி இடமாற்றம் செய்யப்படவுள்ளார். குஜராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் மாற்றப்பட்ட 18 முதன்மை மாவட்ட நீதிபதிகளில் டேவும் ஒருவர்.
நரோடா காம் கலவர வழக்கில் நீதிபதி டேவ் இறுதி வாதங்களை கேட்டுக் கொண்டிருந்தார்.
தற்போது நீதிபதி மாற்றத்தால் புதிய நீதிபதி இறுதி வாதங்களை புதிதாகக் கேட்க வேண்டியிருக்கும். இவ்வாறு இழுத்தடித்து இழுத்தடித்து பல வருடங்களாக இந்த வழக்கு நடந்து கொண்டு வருகிறது.
இவ்வழக்கு முதலில் நீதிபதி S.H.வோரா வால் விசாரிக்கப்பட்டு வந்தது. இவர் பின்னர் குஜராத் உயர் நீதிமன்றம் நீதிபதியாக 2009 மே மாதம் 8 ஆம் தேதி பதவி உயர்வு வழங்கப்பட்டார். இவரை தொடர்ந்து இவ்வழக்கை நீதிபதி ஜ்யோட்சனா யாக்னிக் விசாரித்தார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவரை தொடர்ந்து இவ்வழக்கை நீதிபதி தேசாய் இதுவரை விசாரித்து வந்தார்.
“புதிய நீதிபதி நியமிக்கப்பட்டவுடன் இறுதிகட்ட வாதங்களில் முதலில் இருந்து தொடங்க வேண்டும். சாட்சியங்களின் வாக்குமூலங்கள் மீண்டுமொருமுறை கேட்கவேண்டிய அவசியமில்லை.” என்று SIT வழக்கறிஞர் சுரேஷ் ஷா அப்போது தெரிவித்திருந்தார், இப்போதும் அதே போன்று தான் நடைபெற்று வருகிறது.
SIT விசாரிக்கும் முக்கியமான ஒன்பது வழக்குகளில் நரோடா காம் கலவர வழக்கும் ஒன்று. 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற நரோடா காம் கலவர வழக்கில் முன்னாள் குஜராத் அமைச்சர் மாயா கோட்னானி உட்பட மொத்தமாக 82 நபர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள்.
எங்களுடன் டெலிகிராம் செயலியில் இணையவும் ..