மார்ச் 17 அன்று ஷேக் முஜிபுர் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடக்கவிருந்த மாபெரும் பேரணியை பங்களாதேஷ் அரசு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. இதனையடுத்து இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பங்களாதேஷ் பயணம் ரத்தாகியுள்ளது. பங்களாதேஷில் இதுவரை மூன்று பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யபட்டுள்ளது.
டெல்லியில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து பங்களாதேஷில் பிரமாண்டமான மக்கள் போராட்டங்கள் நடைபெற்றது. அதில் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு திரும்ப பெற வேண்டும், மோடி பங்களாதேஷிற்குள் நுழைய கூடாது என மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை காரணமாக கூறி மோடியின் பயணம் ரத்தாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அரசின் என்.ஆர்.சி சி ஏ ஏ சட்டங்கள் கொண்டுவரப்பட்டது முதல் பங்களாதேஷுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கேற்ப வெளியுறவு மந்திரி முதல் சபாநாயகர் வரை உயர்மட்ட பங்களாதேஷ் அதிகாரிகள் பலர், பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியா செல்லவிருந்த தங்கள் பயணங்களை கடைசி நிமிடத்தில் ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.