கேரள அரசு மற்றும் வேறு சில மாநிலங்களின் நடவடிக்கையை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு காங்கிரஸ் தெலுங்கானா பிரிவுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான என் உத்தம்குமார் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவை கேட்டுக்கொண்டுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), என்.பி.ஆர் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) ஆகியவற்றிற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற மாநில அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அவர் வரவேற்றார்.
“என்.பி.ஆர், என்.ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ க்கு எதிராக தெலுங்கானா சட்டமன்றத்தின் தீர்மானத்தை நாங்கள் வரவேற்கும் அதே சமயத்தில், தெலுங்கானா மாநிலத்தில் என்.பி.ஆர் பணிகளை நிறுத்த இந்த நடவடிக்கை மட்டும் போதுமானதாக இல்லை” என்று அவர் சந்திரசேகர் ராவிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளிடையே எழக்கூடிய குழப்பங்களை தீர்க்க, வேறு சில மாநிலங்களில் செய்யப்பட்டுள்ளபடி அரசாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என அவர் கடிதத்தில் கூறியுள்ளார். கேரள அரசின் சமீபத்திய உத்தரவை மேற்கோள் காட்டிய அவர், என்.பி.ஆர் புதுப்பித்தலுடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
CAA க்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்போவதாக தெலுங்கானாவில் உள்ள டிஆர்எஸ் அரசாங்கம் ஏற்கனவே கூறியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற மாநில அமைச்சரவையின் கூட்டத்தில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.