டிவிட்டரில் நேற்று யெஸ் பேங்க் குறித்த சில கேள்விகளை அரசை நோக்கி ப சிதம்பரம் எழுப்பி இருக்கிறார்.
அவற்றில் முக்கியமான ஒன்று மார்ச் 2014 ல் யெஸ் பேங்க்கின் லோன் 55,633 கோடியாக இருந்திருக்கிறது. மார்ச் 2019ல் அது 2,41,999ஆக உயர்ந்து விட்டிருக்கிறது. அதாவது ஆண்டுக்கு 35 சதம் லோன் அதிகரிப்பு. இது எப்படி நடந்தது, இது குறித்து ரிசர்வ் வங்கிக்கும், நிதியமைச்சகத்துக்கும் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார்.
முந்தைய காங்கிரஸ் அரசில்தான் யெஸ் பேங்க் சரிவுக்கு வித்திடப் பட்டது என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் குற்றச் சாட்டை இந்தத் தரவு மறுதலிக்கிறது. (முந்தைய அரசின் தவறாகவே இருந்தாலும் இன்றைய அரசுக்கு அவற்றை சரி செய்ய ஆறு ஆண்டுகள் இருந்திருக்கின்றன என்பது தனி விஷயம்.)
என்னைப் பொருத்தவரை, இப்படி எல்லாம் பிரச்சினை வருகிறது என்பது கூட கவலை தரவில்லை. ஏனெனில் தவறு என்பது மனித இயல்பு; மனிதர்களால் நடத்தப்படும் அரசுகளும் தவறு செய்யும். நல்ல நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் கூட சில தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
ஆனால் இது எதையுமே ஒப்புக் கொள்ள மனமின்றி கஜினி முகமது முதல் கொரோனா வைரஸ் வரை இந்த அரசு பழி போடுவதுதான் கவலை தருகிறது. எந்தத் தவறையும் ஏற்றுக் கொள்ளும் ownership அரசுக்கு இருப்பதாக தெரியவில்லை. அடுத்து யார் மீது பழி போடலாம் என்றுதான் காத்திருப்பதாக தெரிகிறது.
உங்கள் அலுவலகத்தில் ஒரு புது மேனேஜர் வந்து கம்பெனியில் இருக்கும் பிரச்சினை எல்லாவற்றுக்கும் பழைய மேனேஜரை குறை சொல்லிக்கொண்டு இருந்தால் அதை எப்படிப் பார்ப்பீர்கள்? அதுவும் அவர் ஆறு ஆண்டுகள் மேனேஜராக இருந்த பின்னும் எழும் புதிய பிரச்சினைகளுக்கும் பழைய மேனேஜர் மேல் பழி போட்டால்? அப்படிப்பட்ட மேனேஜரின் திறமை மட்டும் கேள்விக்கு உள்ளாகக் கூடாது; அவரின் நெஞ்சுறுதியும் நேர்மைத் திறனும் சேர்ந்தே கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
ஆக்கம்: அரவிந்த்