கடந்த பத்தாண்டுகளாக சீக்கிய மற்றும் முஸ்லிம்களிடையே நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த குருத்வாரா-பள்ளிவாசல் இடம் தொடர்பான வழக்கில் முஸ்லிம்கள் அந்த இடத்தை சீக்கியர்களுக்கே விட்டுக் கொடுத்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் சஹ்ரான்பூர். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு நகரம். இந்த நகரத்தில் சீக்கியர்களுக்கான குருத்வாரா உள்ளது. 2010ம் ஆண்டு குருத்வாராவை விரிவாக்கம் செய்ய அருகிலிருந்த ஒரு இடத்தை வாங்கி அந்த இடத்திலிருந்த கட்டிடத்தை இடித்துள்ளனர். அதில் பழைய மசூதிக் கட்டிடமும் ஒன்று.
பள்ளிவாசல் இடத்தை சொந்தம் கோரி முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இரு சமூகத்திற்கிடையே பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. 2014ல் இரு சமூகத்தினரிடையே மோதலும் ஏற்பட்டது.
இந்த சூழலில் டெல்லியில் முஸ்லிம்களுக்கெதிராக பேரினவாதத் தீவிரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை வெறியாட்டத்தில் தங்கள் பகுதியில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பாக சீக்கிய சமூக மக்கள் இருந்தனர். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான முஸ்லிம் போராட்டங்களிலும் சீக்கியர்கள் அதிக அளவு கலந்து கொண்டு ஆதரவையும் தெரிவித்தனர்.
இதற்கு நன்றி பாராட்டும் விதமாக பள்ளிவாசல் நிர்வாகக் குழு பிரச்சினைக்குரிய இடத்தை குருத்வாரா விரிவாக்கத்திற்கு அளிப்பது எனவும் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுவது எனவும் முடிவு செய்து சீக்கிய சமூக மக்களிடம் இதை தெரிவித்தனர்.
இதனையடுத்து முஸ்லிம்கள் பங்கேற்க குருத்வாரா கட்ட அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அங்கிருந்து சிறு தொலைவில் பள்ளிவாசல் நிர்வாகம் வேறொரு இடத்தில் பள்ளிவாசல் கட்டவும் சீக்கியர்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
முஸ்லிம்கள் சீக்கியர்கள் ஒற்றுமைக்குப் பாடுபட்ட நகரசபை நிர்வாகத்திற்கும் பாராட்டுகள் குவிகிறது.
ஆக்கம்: அஹ்மத்