ஜஜ்ஜார்: டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள ஜஜ்ஜார் மாவட்டத்தின் இஷர்ஹெடி கிராமத்தில் சுமார் 20 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாசிச கும்பல் ஒன்று முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து ஹோலிக்கு முன் வீடுகளை காலி செய்து விட்டு ஓடி விடுங்கள். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி மார்ச் 1 ம் தேதி, பகதூர்கர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 20-35 வயதுக்குட்பட்ட 60-70 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடந்த பிப்ரவரி 29 அன்று காலனிக்குல் வந்து ஹோலிக்கு முன் வீடுகளை காலி செய்யுமாறு கூறி மிரட்டியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் அச்சம்:
இப்பகுதியைச் சேர்ந்த தச்சர் ஒருவர், “இந்த சம்பவத்தை தொடர்ந்து இங்கு வாழும் முஸ்லிம்கள் கடும் அச்சத்தில் இருப்பதாக” டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.
இப்பகுதியில் வாழும் கூலி தொழிலாளியான ஒருவர் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தனது வாழ்வாதாரத்தை தேடி இங்கு வசித்து வருகிறார். அவரும் இதே போன்று பயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடக்கவுள்ள நிலையில் இவ்வாறு அச்சமான சூழ்நிலை எழுந்துள்ளதால் வீட்டில் உள்ள பிள்ளைகளும் கடும் அச்சத்தில் உள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
போலீசார் நடவடிக்கை:
இது குறித்து கருத்து தெரிவித்த டிஎஸ்பி அசோக்குமார், நடந்த சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மிரட்டப்பட்ட குடும்பங்களுக்கு 24 மணிநேர பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Image used for representation