இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் ஏராளமான முஸ்லிம்களை நாடற்றவர்களாக மாற்றக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானில் உள்ள தி டான் செய்தித்தாளுக்கு அவர் அளித்த பேட்டியில், மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அவர் கவலை தெரிவித்தார், மேலும் புதிய சட்டங்களை உருவாக்கும் போது மனிதாபிமானத்துடன் செயல்படுமாறு உலக நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டுள்ளதாக திரு. அன்டோனியோ குடரெஸ் மேலும் கூறினார்.
புதிய குடியுரிமைச் சட்டங்களை இயற்றும் அதே வேளையில், மக்களை நாடற்றவர்களாக ஆக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
காஷ்மீர்:
மோடி அரசு 370 சட்டப்பிரிவை காஷ்மீர் மக்களுடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக ரத்து செய்த பின்னர் நிலவும் காஷ்மீர் நிலையை குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் வெளியிடப்பட்ட அறிக்கைகளை எடுத்துரைத்த அவர், ‘இவை அப்பகுதியில் நிலவும் யதார்த்த நிலையை படம்பிடித்து காட்டுகின்றன’ என்றார்.
யுஎன்எஸ்சி யின் பணி :
“இந்த அறிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது” என்று கூறிய அவர் காஷ்மீரில் மனித உரிமைகள் குறித்து விசாரிக்க யு.என். குழு ஒன்றை அமைப்பது பாதுகாப்பு கவுன்சிலின் பணியாகும் என்றார்.