NRC Telangana

ஹைதிராபாத்: குடியுரிமை நிரூபிக்குமாறு ஆதார் ஆணையத்தில் இருந்து பலருக்கு நோட்டீஸ்..

ஹைதராபாத்தில் வசிக்கும் சத்தார் கானுக்கு கடந்த பிப்ரவரி 3 ம் தேதி ஆதார் ஆணையம் (யுஐடிஏஐ-இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) ஒரு கடிதம் அனுப்பியுள்ளது, அதில் அவர் ஒரு இந்திய குடிமகனா என்று கேள்வி எழுப்பட்டுள்ளது.

மேலும் சத்தார் பொய் பித்தலாட்டங்களின் மூலம் ஆதார் அட்டையைப் பெற்றதாகவும், பொய்யான கூற்றுக்கள் மற்றும் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும் யுஐடிஏஐ அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சத்தார் ஒரு இந்திய நாட்டவர் அல்ல என்று யார் புகார் அளித்தது என்ற தகவலை ஆதார் ஆணையம் கூற மறுக்கிறது.

விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும், இல்லைனா இந்தியன் இல்ல:

இந்திய குடியுரிமையை நிரூபிக்க தேவையான அசல் ஆவணங்களை எடுத்து கொண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி காலை 11 மணிக்கு ரங்காரெட்டி மாவட்டம் பாலாபூரில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு யுஐடிஏஐ சத்தாருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் ஒரு இந்திய நாட்டவர் இல்லையென்றால், அவர் சட்டபூர்வமாக நாட்டிற்குள் நுழைந்ததாக நிரூபிக்க வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் ஆவணங்களை எடுத்து வாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது, எனினும் என்ன ஆவணம் என்று கூட நோட்டீஸில் கூறப்படவில்லை.

விசாரணைக்கு ஆஜராக தவறும் பட்சத்தில் புகார் உண்மையானது என எடுத்து கொள்ளப்படும். உங்கள் ஆதார் அட்டை ரத்து செய்யப்படும். மேலும் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கையை யுஐடிஏஐ அறிவிக்கும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்களை விசாரணைக்கு அழைத்து அவர்களின் குடியுரிமையை கேள்விக்குட்படுத்த யுஐடிஏஐ வுக்கு அதிகாரம் இல்லை என வழக்கறிஞர் முசாஃபருல்லா கான் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை மண்டபத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே நிறைய நபர்களுக்கு இவ்வாறான நோட்டீஸ் அனுப்ப பட்டுள்ளது என தெரிகிறது எனவும் வழக்கறிஞர் முசாஃபருல்லா தெரிவித்துள்ளார்.

அதிகார வரம்பு மீறல்:

“சத்தார் கான் 40 வயதைக் கடந்தவர், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். அவரது குடும்பத்தினர் அனைவரும் கூட ஹைதராபாத்தில் வசிப்பவர்கள் தான் அவர்களிடம் ரேஷன் கார்டுகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளும் உள்ளன. இந்த நபர் 100% இந்தியர், அவரது தந்தை அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனத்தில் (பி.எஸ்.யூ) பணிபுரிந்தவர், அவரது தாயார் ஓய்வூதியதாரர் ” என வழக்கறிஞர் முசாஃபருல்லா தெரிவிக்கிறார்.

“ஆதார் அட்டை குடியுரிமைக்கு ஆதாரம் இல்லை என்பது ஆதார் அட்டையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், போலி ஆதார் அட்டையை ஒருவர் வைத்திருந்தாலும் கூட அவரை நாட்டின் குடிமகன் இல்லை என எப்படி அறிவிக்க இயலும் ? ” என கேள்வி எழுப்புகிறார் முசாஃபருல்லா.

ஆதார் பதிவு மற்றும் புதுப்பிப்பு ( 2016) விதிமுறைகளின் விதி 29 இன் கீழ், யுஐடிஏஐக்கு ஆதார் அட்டையை செயலிழக்கச் செய்யும் அதிகாரம் மட்டுமே உள்ளது, ஆதார் அட்டைதாரரின் தேசியத்தை கேள்விக்குள்ளாக்கும் கடிதத்தை அனுப்பி விசாரணைக்கு ஆஜராக சொல்லும் அதிகாரம் இல்லை எனவும் வழக்கறிஞர் தெரிவித்துளளார்.

முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்:

இவ்வாறு மொத்தம் 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. இந்த நோட்டிஸை பெற்றவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களாகவும், ஏழை எளிய மக்களாகவும், முஸ்லிம்களாகவும் உள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளங்களில் கண்டன குரல்கள் எழ துவங்கியதும், ஆதார் ஆணையம் பல்டி அடித்துள்ளது. அதாவது நாங்கள் குடியுரிமை நிரூபிக்க சொல்லவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது, எனினும் கடிதத்தில் நேர் மாற்றமாக கூறப்பட்டுள்ளது.

இந்த வாசலை ஆரம்பத்திலேயே அடைக்கவில்லை என்றால் பாசிச பயங்கரவாதிகள் இவ்வாறு யார் மீதும் அடிப்படை ஆதாரமின்றி புகார் கொடுப்பார்கள், நாம் இந்தியன் என்று நிரூபிக்க நாயாய் பேயாய் அலைய வேண்டியது தான்.