“மாதவிடாய் ஏற்பட்ட பெண் சமைத்த உணவை நீங்கள் ஒருமுறை உண்டாலும் கூட, அடுத்த ஜென்மத்தில் நீங்கள் கட்டாயம் “பலட்” (எருதாக) தான் பிறப்பீர்கள். மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் ஒரு பெண் தனது கணவருக்கு சமைப்பாளானால் அவள் அடுத்த பிறவியில் கட்டாயம் “குத்ரி” (பெண் நாய்) ஆக தான் பிறப்பால். இது ஷாஷ்திரத்தில் சொல்லப்பட்டதாகும். எனவே இந்த பிரச்னையில் இருந்து தப்பித்து கொள்ள ஆண்கள் திருமணத்திற்கு முன்னரே சமையல் கற்று கொண்டிருக்க வேண்டும். ”
இது குஜராத்தில் உள்ள சுவாமிநாராயண் பூஜ் கோவிலின் சுவாமி கிருஷ்ணஸ்வரூப் தாஸ்ஜியின் பிரசங்கத்தில் இடம்பெற்ற வார்த்தைகள் தான் இவை.
மேலும் தொடரும் சுவாமிஜி :
“நீங்கள் இதை பற்றி என்ன நினைத்தாலும் சரி, இவையெல்லாம் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை.
நான் உங்களுக்கு இந்த உபதேசத்தை வழங்குவதா இல்லையா என்றே எனக்கு தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக இப்போது தான் இந்த உபதேசத்தை உங்களுக்கு வழங்குகிறேன்.
ஒரு வேளை நான் இதை பற்றி சொல்ல வில்லையானால், உங்களுக்கு இது பற்றி புரியாமலே போய் விடும்.
மாதவிடாய் ஏற்பட்ட பெண் சமைத்தாக இருந்தாலும் கூட நீங்கள் அந்த ரொட்டிகளை சாப்பிடுகிறீர்கள்.
மாதவிடாய் ஏற்பட்ட அந்த மூன்று நாளும் தனிமையில் கழிக்கவேண்டும் என்ற அறிவு அவளுக்கு இல்லை.
இது குறித்த ஒவ்வொரு செய்தியும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கு. எனவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்.
திருமணம் முடிக்கும் முன் சமைக்க கற்று கொள்ளுங்கள்.”
கண்டிக்கவில்லை:
சுவாமிஜி பேசிய இந்த காணொளி பழையது தான் எனினும் தற்போது வைரல் ஆனதை தொடர்ந்து கோவில் நிர்வாகிகளிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. “நான் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மாட்டேன்” என பூஜில் உள்ள ஸ்ரீ சுவாமநாராயண் கோவிலின் அறங்காவலரும், தொழிலதிபருமான ஜாதவ்ஜி கோரசிய தெரிவித்துள்ளார். அதே போல கோயிலின் கோத்தாரி சுவாமியான தேவ்பிரகாஷ் சுவாமியும், “நான் இதைப் பற்றி பேச விரும்பவில்லை” என கூறியுள்ளார். எவருமே பேசப்பட்ட இழிவான கருத்துக்கு கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை.
சுவாமிஜி கல்லூரியில் செயல்முறை:
முன்னதாக பூஜில் உள்ள ஒரு கல்லூரியின் 60 க்கும் மேற்பட்ட பெண் மாணவர்கள், அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதா என்று சோதிக்க, உள்ளாடைகளை அகற்றுமாறு விடுதி அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டனர். இது கடும் சர்ச்சை ஆகியது. இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த கல்லூரி சுவாமி கிருஷ்ணஸ்வரூபின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கல்லூரி நிர்வாகத்தின் கீழ்த்தரமான செயல்பாட்டுக்கு அடிப்படையே ஸ்வாமியின் பிரசங்கங்கள் தான் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கைது நடவடிக்கை :
இந்த சம்பவத்தில் குஜராத் கல்லூரி முதல்வர் உட்பட நான்கு பேரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். முதல்வர் ரீட்டா ரணிங்கா, பெண்கள் விடுதி பொறுப்பாளர் ரமிலாபென் ஹிரானி, கல்லூரி பியூன் நைனா கோரசியா மற்றும் அனிதா சவுகான் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பின்னர், தேசிய மகளிர் ஆணையத்தின் (என்.சி.டபிள்யூ) ஏழு பேர் கொண்ட குழு ஞாயிற்றுக்கிழமை ஹாஸ்டல் சென்று பெண் மாணவிகளை சந்தித்தனர்.