சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எனும் கருப்பு சட்டத்தை கண்டித்து தன்னெழுச்சியாக மக்கள் போராடி வருகின்றனர்.
ஜனநாயக நாட்டில் அகிம்சாவழியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தை சகித்துக் கொள்ளாத பாசிச அதிமுக அரசு மக்கள் கூட்டத்தை கலைக்க காவல்துறையை ஏவிவிட்டது.
காவல்துறை நடத்திய தடியடியால் ஆண்கள் – பெண்கள் என பலர் காயமடைந்ததுடன் தடியடியால் ஏற்பட்ட சூழலில் அப்பகுதியில் வசித்து வந்த முதியவரின் உயிரும் பலியாகியுள்ளது.
இத்தகைய கோரத்தாண்டவத்தை ஆடிய அதிமுக அரசு – காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்து தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டங்கள் வெடித்தன.
சிஏஏ விற்கு எதிரான கோஷங்களை எழுப்புவதுடன் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்ட காலிகள் மீது துறைரீதியான நடவடிக்கை வேண்டும் என அப்போராட்டத்தின் வாயிலாக கோரிக்கை வைக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வருகின்ற சட்டமன்ற கூட்டத்திலே வண்ணாரப்பேட்டை தாக்குதல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு முதல்வர் அளித்துள்ள பதில் வெந்த புண்ணில் வேள் பாய்ச்சுவதை போல் அமைந்துள்ளது.
போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள், வாகனங்கள் மீது கல்வீசினார்கள், காவல்துறையை தாக்கினார்கள் என்று வாய்க்கு வந்ததையும் காவித்துறை எழுதிக் கொடுத்ததையுமே வாசித்துள்ளார்.
முதல்வரின் இப்பேச்சு பச்சைப் பொய் என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கறிவர்.
வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் நடந்தது என்ன?
ஆண்கள் – பெண்கள் என பெருந்திரளான மக்கள் தன்னார்வத்துடன் தெருவில் அமர்ந்து சிஏஏ விற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.
கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவே காவல்துறையினர் அங்கு வந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தக் கூடாது எனவே கலைந்து செல்லுங்கள் என்று போராட்டக்காரர்களிடம் கூறுகின்றனர்.
மக்கள் கலைந்து செல்ல மறுக்கவும் அரெஸ்ட் ஆகுங்கள் என்று காவல்துறை கூறியுள்ளது.
அதற்கு ஜனநாயக வழியில் போராடும் நாங்கள் ஏன் அரெஸ்ட் ஆக வேண்டும்? நாங்கள் என்ன மக்களுக்கு இடையூறாகவா போராடுகிறோம்? எங்கள் தெருக்களில் அமர்ந்து தானே போராடுகிறோம்? என்று மக்கள் அரெஸ்ட் ஆக மறுத்துள்ளனர்.
பேரி கார்டுக்கு அப்பால் ஆண்கள் – பெண்கள் என மக்கள் திரள் இந்த பகுதியில் காவல்துறை என இருக்கும் நிலையில் இப்போது தான் காவல்துறை தனது காவிப்புத்தியை காட்டுகிறது.
பேரிகார்டை நகர்த்தி, தள்ளி அந்த பகுதியில் இருக்கிற ஆண்களை எல்லாம் தரதரவென்று இழுத்துச் செல்கிறார்கள். வர மறுப்பவர்களை பத்து பதினைந்து காவல்குண்டர்கள் சேர்ந்து கொண்டு மிதிக்கிறார்கள்.
பெண்களுக்கு எந்த பாதிப்பும் நேர்ந்து விடக் கூடாது தங்கள் கைகளால் சங்கிலி போட்டு ஆண்கள் நிற்க அவர்களை தாக்கியுள்ளனர். பெண்களை தாக்கியுள்ளனர்.
அதுவரை அமைதியாக நடைபெற்றுவந்த போராட்டக்களம் வன்முறைக்களமாக மாறுகிறது. அப்படி மாற்றியது அராஜக போலீசுதான்.
காவல்துறை செய்த இத்தகைய அராஜகங்கள் அனைத்திற்கும் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன.
வன்முறையை உருவாக்கியது போலீஸ் தான் என்பதற்கு இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் பச்சையாக பொய் சொல்வது முதல்வருக்கு அழகா?
போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டார்கள் என்றால் அதற்குண்டான ஆதாரங்களை எடப்பாடி அரசால் காட்ட முடியுமா?
ஒட்டு மொத்த தமிழகமும் உண்மை என்ன என்பதை அறிந்து வைத்திருக்கும் சூழலில் போராட்டக்காரர்கள் கல்வீசினார்கள் என்று சட்டமன்றத்திலேயே முதல்வர் துணிந்து பொய் சொல்கிறார் என்றால் முதல்வரின் மோடி விசுவாசம் மெய்சிலிர்க்கச் செய்கின்றது.
ஜனநாயகத்தை மதித்து அறவழி போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பது பாசிசத்தின் வேலையாகும். அதை தமிழக முதல்வர் செய்வது அவமானகரமானது.
பாதிக்கப்பட்ட மக்களின் குரலை தமிழக முதல்வர் வெளிப்படுத்துவார் என்று நம்பிய மக்களுக்கு தானொரு பாசிச பாஜகவின் கைக்கூலியே என்பதை இதன் மூலம் முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.
தன்னெழுச்சியான மக்கள் பேராட்டத்தை கொச்சைப் படுத்தும் விதமாக சில இயக்கங்களின் தூண்டுதலின் பேரில் போராடுகிறார்கள். இது மக்கள் போராட்டமல்ல என்கிறார் முதல்வர்.
எந்த இயக்கமும் எந்த தலைவரும் சொன்னாலும் கேட்காத மக்கள் தான் வண்ணாரப்பேட்டையில் போராடி வருகின்றனர். கைக்குழந்தையுடன் பெண்கள் ஆர்ப்பரித்த மக்கள் கூட்டத்தை குறிப்பிட்ட சில இயக்கத்திற்குள் அடைக்க நினைக்கும் முதல்வரின் இச்செயல் இழிவானது.
இலட்சக்கணக்கான மக்கள் மத வேறுபாடுகளை களைந்து, இயக்க மாறுபாடுகளை மறந்து சிஏஏ சட்டம் திரும்ப பெற வேண்டும் எனக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதை எல்லாம் கவனித்து வரும் முதல்வர் சிஏஏ சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படாது என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியிருக்க வேண்டும். அதுவே ஜனநாயக வழியில் போராடும் இலட்சக்கணக்கான மக்கள் உணர்வை புரிந்து கொண்ட முதல்வரின் செயலாகும்.
சிஏஏ சட்டத்திற்கு எதிராக குரலெழுப்பிய 11 மாநில முதல்வர்கள் அதைத்தான் செய்தார்கள். தமிழகம் அளவிற்கு அங்கெல்லாம் போராட்டங்கள் நடைபெற்றிடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பல மாநில முதல்வர்கள் மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதோடு தாங்களும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை முன்னின்று நடத்தினார்கள்.
ஆனால் தமிழக முதல்வரோ மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார். போராட்டக்காரர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்க தூபம் போடுகிறார். சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் தீர்மானம் இயற்ற மறுக்கிறார்.
பாஜகவின் கைக்கூலியாக அல்ல, பாஜக முதல்வராகவே மாறிவிட்டுள்ளார் என்பது தான் அவரது விளக்கம் தமிழக மக்களுக்கு உணர்த்தும் செய்தி.
எதற்கும் கையாலாகாத, மோடிக்கு சேவகம் செய்யும் அடிமை அரசு என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளார்.
மொத்தத்தில் கொந்தளிப்பில் இருக்கும் மக்களின் கோப உணர்வை தணிப்பதற்கு பதிலாக மென்மேலும் தூண்டும் விதமாக பேசியுள்ளார்.
விஸ்வரூபம் பட பிரச்சினையில் மக்கள் உணர்வை கவனித்து விளக்கம் அளித்த அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் எடப்பாடி பாடம் படிக்கவில்லை.
இது இன்னும் பல போராட்டக்களத்திற்கே வழி வகுக்கும்.
இனி தமிழகத்தில் நடைபெறவுள்ள அனைத்து போராட்டக்களத்திற்கும் தமிழக முதல்வரே பொறுப்பேற்க வேண்டும்.
எதிர்வரும் தேர்தலில் அதிமுக அரசிற்கு தக்க பாடத்தை தமிழக மக்கள் வழங்கியே தீருவார்கள்.
என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.