விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தலித் சமூகத்தை சேர்ந்த 24 வயதான சக்திவேல் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மேல்ஜாதி என்று தங்களை அழைத்து கொள்ளும் ஒருவருக்கு சொந்தமான வயலில் இயற்கை தேவையை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை பிடித்து அடித்தே கொன்றுள்ளது ஒரு வெறிபிடித்த கும்பல்.
இந்த கொடூர சம்பவம் புதன்கிழமை நடைபெற்றுள்ளது, இளைஞர் தாக்கப்படுவது தொடர்பான வீடியோக்கள்வைரல் ஆனது. அதற்கு பிறகு வெள்ளிக்கிழமையன்று போலீசார் 7 பேரைக் கைது செய்து, மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
வீட்டை விட்டு சென்ற சக்திவேல்:
செவ்வாயன்று இரவு நேர பணியை முடித்து விட்டு வியாழன் காலை வீட்டிற்கு வந்து சேர்ந்தார் சக்திவேல். பிறகு அவரது பெட்ரோல் பங்கில் பணிபுரியும் அவரது நண்பர்கள் போனில் அழைத்து உடனே ஆதார் அட்டை மற்றும் ஒரு புகைப்படத்தையும் எடுத்து வருமாறு பங்கில் கூறுவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மதியம் 1.30 மணி அளவில், “வண்டில பெட்ரோல் கொஞ்சமா தான் இருக்கு” என்று கூறிவிட்டு சென்றார் எனது சகோதரர் சக்திவேல் என்கிறார் தெய்வானை.
வயிற்றில் அசவுகரியம்:
வீட்டில் இருந்து பெட்ரோல் பங்க் 27 கிமி தூரத்தில் உள்ளது. சக்திவேல் சென்ற சிறிது நேரத்தில் பெட்ரோல் காலிவியாகி விட்டது. எனவே வண்டியை 1 கிமீ வரை தள்ளி கொண்டே சென்று அவரது நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து ஒரு பாட்டிலில் பெட்ரோல் கொண்டு வருமாறு கூறியுள்ளார். அப்போது வயிற்றில் அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. எனவே வேறு வழியின்றி ரோட்டோரமாக மலம் கழிக்க முற்பட்டுள்ளார். இவை அனைத்தையும் சகோதரி தெய்வானையிடம் போனில் தெரிவித்துள்ளார் சக்திவேல்.
போனில் மீண்டும் அழைப்பு:
“சிறிது நேரத்திற்குப் பிறகு, அவருடைய தொலைபேசியிலிருந்து எனக்கு மீண்டும் அழைப்பு வந்தது, அவர் தனது அலுவலகத்திற்கு போய் சேர்ந்தாச்சா என்று நான் கேட்டேன். ஆனால் மறுமுனையில் வித்தியாசமான குரல் இருந்தது. ஏனெனில் பேசியது சக்திவேல் இல்லை. மறுமுனையில் பேசிய அந்த நபர் சக்திவேலை அவர்கள் கட்டி வைத்துள்ளதாகவும், அவர்கள் கஸ்டடியில் தான் சக்திவேல் இருப்பதாகவும் கூறினார் . புத்தூர் பகுதிக்கு (அவர்களின் வீட்டிலிருந்து சுமார் 5 கி.மீ) வந்து சேரும்படி என்னிடம் கூறினார். ஏதோ சிக்கல் ஏற்பட்டு உள்ளது தெளிவாக தெரிந்தது.” என்று தெய்வானை கூறுகிறார்.
கொடூர மனித மிருகங்களின் அட்டூழியம்:
உடனடியாக உறவினர் மற்றும் 6 மாத கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு சம்பவ இடத்திற்கு தெய்வானை விரைந்தார். “நாங்கள் அங்கு அடைந்த போது சக்திவேலின் வாய் மற்றும் மூக்கிலிருந்து அதிகமாக ரத்தம் வடிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றோம். மேலும் 15-20 நபர்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். நான் அங்கு சென்ற பிறகு என கண் முன்னே மீண்டும் சக்திவேலை தாக்கினர்.
நான் அவர்களைத் தடுக்க முயற்சித்தேன், உதவிக்காக மன்றாடினேன், ஆனால் அவர்கள் என்னை உதைத்தார்கள், அதனால் என் கையில் இருந்த குழந்தை தரையில் விழுந்தது. சக்திவேல் பேச கூட முடியாத நிலையில் இருந்தார். ஆனால் செய்கையின் மூலம் என்னை போய் விடுமாறு அவர் கூறினார்.” என்கிறார் தெய்வானை.
போலீஸ் வருகை:
சம்பவம் நடைபெற்ற 2 மணி நேரம் கழித்து ஒரு வழியாக அங்கு வந்து சேர்ந்த போலீசார் கண் முன்னர் கூட மீண்டும் அந்த வெறிபிடித்த மிருகங்கள் அடித்துள்ளனர். அதன் பிறகு போலீசார் சக்திவேல் மற்றும் தெய்வானையை வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளனர். மேலும் நாளைக்கு விசாரணைக்கு காவல்நிலையம் வருமாறும் கூறியுள்ளனர் போலீசார்.
இந்த நிலையில் கூட போலீசார் ஒரு ஆம்புலன்ஸை கூட வர வழைக்கவில்லை. இருசக்கர வாகனத்தில் கொலைவெறி தாக்குதலில் காயமடைந்த சக்திவேலை கூட்டி கொண்டு சென்றுள்ளனர் அவரது உறவினர்.
சக்திவேல் பரிதாப மரணம்:
வீட்டிற்கு சென்று பணம் எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு செல்வோம் என வீட்டிற்கு சென்றோம். வண்டியில் இருந்து இறங்கும் போதே சக்திவேல் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மயக்கம் அடைந்து விட்டதாக எண்ணி அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். எனினும் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினார்கள், என்கிறார் தெய்வானை.
தனது கீழாடை மிகவும் இறுக்கமாக இருந்ததால், அதை முழுவதும் கழற்றி விட்டு சக்திவேல் மலம் கழித்துள்ளார். பிறகு மீண்டும் ஆடையை அணிந்து கொண்டிருக்கும் போது தூரத்தில் இருந்து ஒரு மேல் ஜாதியென அழைத்து கொள்ளும் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை நோக்கி ஆண் உறுப்பை காண்பிப்பதாக நினைத்து கொண்டு அவர் அனைவரையும் அழைத்துள்ளார். பிறகு இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாசமிகு சகோதரன் சக்திவேல்:
“எனது சகோதரர் 10 ம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு வேளைக்கு சென்றார். சிமெண்ட் மூட்டை தூக்கி தனது உழைப்பில் எனக்கும் எனது இளைய சதோதரிக்கும் திருமணம் முடித்து வைத்தார். அவர் எந்த பெண்ணிடமும் அத்துமீறி இருக்க வாய்ப்பே இல்லை.
அவரை பிடித்த பிறகு உனது அப்பா பெயர் சொல்லு, யார் நீ என்று கூறி அடிக்க ஆரம்பித்துள்ளனர், பிறகு அவரது ஆதார் அட்டையை எடுத்து அவரது சாதியை அறிந்து கொண்டு அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர். இழிவான சொற்களை கூறியவாறு கடுமையாக தாக்கியுள்ளனர்.அவர் தலித் என்பதால் அடித்து கொன்றுள்ளனர்.” என்கிறார் தெய்வானை.
ஜாதி காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் . கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் 147,148, 302,294 (B) ஆகிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் கூறினார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. எனினும் ஒரு முக்கிய ஊடகமும் இதற்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து செய்தியை வெளியிட கூட இல்லை. ஆங்கில ஊடகங்களில் சில வற்றில் தான் இந்த செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.