மங்களூர்: சிறுமிகள் மதரசாவுக்கு செல்லும் வழியில் திட்டமிட்டு வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மூன்று நபர்களை பிப்ரவரி 11, செவ்வாயன்று கோனாஜே பொலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடந்த சம்பவம்:
“மூன்று சிறுமிகளும் பிப்ரவரி 10 திங்கள் அன்று பவூர் கிராமத்தில் உள்ள மலாராவில் அமைந்துள்ள மதரசாவுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மலார் பாலம் அருகே அமர்ந்திருந்த மூன்று பேர் சிறுமிகளிடம் உகனாபெயிலுக்கு செல்லும் வழியைக் கேட்டுள்ளனர். சிறுமிகள் வழியைக் காட்ட, அச்சமயம் அவர்களில் ஒருவன் சிறுமிகளில் ஒருவரது கையை இறுக்கமாகப் பிடித்துள்ளான். உடனே அச்சிறுமி அவனது கையை கடித்து விட்டு, மதரசாவுக்கு தப்பி ஓடி அங்குள்ள ஆசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் மற்ற இரண்டு நபர்கள், இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடிவிட்டனர்” என சிறுமிகளின் பெற்றோர் அளித்த பொலிஸ் புகாரில் கூறப்பட்டுள்ளது.
போலீசார் அதிரடி:
பவூர் கிராமமான உகனாபெயிலில் குற்றவாளிகள் இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அவர்களை தேடி சென்ற கோனாஜே நிலைய காவல்துறையினர் , தப்பிக்க முயன்ற மூவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். பாவூர் குடியிருப்பாளர் கிரண் குமார் (26), உகனாபில் பங்கராபடே குடியிருப்பாளர் குணபால் (25), நீர்மர்கா வான்டேமர் குடியிருப்பாளர் சுபாஷ் (29) என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு முயற்சி, கொலை முயற்சி மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.