“10 கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் அந்தரங்க பாகங்களில் தாக்கப்பட்டுள்ளனர். சிலர் மிகவும் மோசமான முறையில் தாக்கப்பட்டுள்ளனர், எனவே அவர்களை நாங்கள் அல் -ஷிஃபா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம் ” என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பாராளுமன்றத்தை நோக்கி பேரணி
பாராளுமன்றத்தை நோக்கிய CAA எதிர்ப்பு அணிவகுப்பில் பங்கேற்ற ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அந்தரங்க பாகங்களில் தாக்கப்பட்டதில் ஜாமியா சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“சில மாணவர்கள் லத்திகளால் மார்பில் தாக்கப்பட்டதால் உள் காயங்கள் ஏற்பட்டுள்ளது.” என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இரு மாணவர்கள் தாங்கள் பிறப்புறுப்பில் தாக்கப்பட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தனர். அதில் ஒருவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெண் மாணவி என்றும் பாராமல் கொடூர தாக்குதல்:
ஆண் மாணவர்களை மட்டும் இவ்வாறு மிருகத்தனமாக நடத்தப்படவில்லை.பெண் மாணவிகளும் இதற்கு விதி விலக்கு இல்லை. “எனது புர்காவை கழற்றி, எனது அந்தரங்க பாகங்களில் பூட்ஸ் காலை கொண்டும், லத்தியாலும் பெண் போலீஸ் தாக்கினார்” என்கிறார் பெண் மாணவி ஒருவர்.
நடந்த சம்பவம்:
நாடெங்கும் சிஏஏ, என்ஆர்சி க்கு எதிராக தொடர் எழுச்சி போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும் மோடி அரசு மக்களின் போராட்டங்களை ஒரு பொருட்டாகவே கருதாமல் உள்ளது. எனவே பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்துவது என ஜாமியா பல்கலை மாணவர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
திட்டமிட்டது போல தேசிய கொடிகளுடன் பேரணியும் நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள பொது மக்கள் சிலரும் கலந்து கொண்டனர். அவர்களை முன்னேறவிடாமல் போலீசார் தடுப்பு அரண்களை கொண்டு தடுத்தனர். திரும்ப செல்லுமாறு போலீசார் கூறியுள்ளனர். எனினும் மாணவர்கள் திரும்ப செல்வதில்லை என உறுதியாக இருந்துள்ளனர்.
“கூட்டத்தில் உள்ள மாணவர்கள் மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டத்தை மதித்து அமைதியாக திரும்பிச் செல்லுங்கள்” என ஜாமியா மில்லியா இஸ்லாமியா ப்ரொக்டர் வசீம் அகமது கான் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
மாணவரின் அந்தரங்க உறுப்பில் தாக்குதல் :
இதனிடையே போலீசார் மாணவர்களின் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவர்கள் என்றும் பாராமல் போலீசார் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பெண்கள் என்றும் பாராமல் போலீசார் அடிப்பதை பார்த்த மாணவர் ஒருவர், பெண்களை காப்பாற்ற வந்துள்ளார், எனினும் அவரையும் லத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளனர் டில்லி போலீசார்.
ஒரு கட்டத்தில் மாணவரின் நெஞ்சு பகுதியிலும் , அந்தரங்க உறுப்பிலும் டில்லி போலீசார் தாக்கியுள்ளனர். தற்போது அந்த மாணவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் கண்டனம் :
கேமராவில் பதியப்பட கூடாது என்பதற்காக மாணவர்களை பெல்ட்டுக்கு கீழ் டில்லி போலீசார் தாக்கியுள்ளனர் என மாணவர்கள் கூறுகின்றனர்.
ஜாமியா மாணவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை கொண்டும் கூட கலைத்து இருக்கலாம், இன்னும் எத்தனையோ வழிமுறைகள் இருந்தும் கூட என்னவென்றே தெரியாத ஒரு ரசாயனத்தை மாணவர்கள் மீது பாய்ச்சியுள்ளது காவல் துறை.இதனால் மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட கொடூரமான ஒரு முறையை டில்லி போலீசார் தேர்ந்தெடுத்து உள்ளது, அவர்கள் ஜாமியா மாணவர்கள் என்பதால் தான் என்ற ரீதியில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் இழிவு :
நாட்டின் தலைநகரில் வெறியாட்டம் அரங்கேறியுள்ளது. எனினும் சம்பவம் நடைபெற்று 16 மணி நேரம் ஆகியும் கூட அரசியல் தலைவர்களில் ஒருவரும் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.. அது கெஜ்ரிவால் ஆகட்டும், ராகுல் காந்தி ஆகட்டும், தமிழக எதிர் கட்சி தலைவர்கள் ஆகட்டும் அல்லது இன்னபிற எந்த ஒரு எதிர்க்கட்சி தலைவரும் இதுவரை கண்டனமோ, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் டில்லி போலீஸ் செயல்படுவதால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பெயர் அளவிலான கோரிக்கையோ கூட வைக்கவில்லை. மானக்கேடில்லயா இது?
அதே போல டில்லி கார்கி கல்லூரியில் நுழைந்த ஒரு பாசிச கும்பல், மாணவிகளை மிகவும் கொடூரமான பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியது. அதிலும் கூட 2 நாள் கழித்து தான் பெயர் அளவில் வாய் திறக்கின்றனர் எதிர் கட்சியினர். டில்லி போலீஸ் இந்த வழக்கில், இது வரை ஒருவரை கூட கைது செய்யவில்லை. . என்னவென்று சொல்ல?